

விவிஐபி ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழலில் ஊடகங்களின் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான பத்திரிகையாளர் ஹரிசிங் சார்பில் வழக்கறிஞர் கீதா லுத்ரா வாதாடினார். அப்போது அவர், “ஹெலிகாப்டர் கொள்முதல் பேரத்தை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு சாதகமாக முடிப்பதற்காக ஊடகங்களை சேர்ந்த சிலருக்கு லஞ்சம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதாடினார்.
இதற்கு நீதிபதிகள், “நேரடித் தொடர்புக்கான ஆதாரம் இல்லாமல் ஊடகங்களுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான மறைமுக முயற்சியாகவே தெரிகிறது. இது ஊடகம் மீதான தாக்குதல் ஆகும். இதை அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.
மேலும், “இந்த வழக்கில் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தால் அதுபற்றி விசாரணை அமைப்புகள் விசாரிக்க தடை ஏதுமில்லை. என்றாலும் ஒட்டுமொத்த ஊடகங்களின் பங்கு குறித்து விசாரிக்க முடியாது” என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, மனுவை தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார்.