

சட்டீஸ்கர் மாநிலத்தில் 'தூய்மை இந்தியா’ கழிப்பறைகளை காணவில்லை என்று தாயாரும், மகளும் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளனர்.
சட்டீஸ்கரின் அமர்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிலா பாட் பட்டேல் (70), அவரது மகள் சந்தா (45) ஆகிய இருவரும் தங்களது இல்லத்திலிருந்த கழிப்பறைகளை காணவில்லை என்று போலீஸாரிடம் புகார் அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி இஸ்ஹாக் கால்கோ கூறும்போது, "சம்பந்தப்பட்ட இரு பெண்களும் அவர்களது இல்லத்திலிருந்த கழிப்பறைகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் முதற்கட்ட தகவலில், பட்டேலும் மற்றும் அவரது மகள் சந்தாவும் கணவனை இழந்தவர்கள். இவர்கள் இருவரும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் அடிப்படையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டித் தர வேண்டி கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு 2015-2016-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களை போல் அமர்பூர் கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு விண்ணப்பித்தனர் அதற்கு கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் ஒப்புதலும் வழங்கியுள்ளது.
கழிப்பறை கட்ட ஒப்புதல் வழங்கி ஒருவருடம் ஆகியும் கழிப்பறை கட்டும் பணி தொடங்கப்படாததால், பட்டேல் மற்றும் அவரது மகளும் கடந்த மாதம் பஞ்சாயத்து அலுவலகத்திடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டதாகவும், அதற்கான பணமும் வழங்கப்பட்டதாகவும் கூரியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்" என்றார்.
இந்தச் சம்பவம் குறித்தும் உள்ளூர் சமூக ஆர்வலர் சுரேந்தர் பட்டேல் கூறும்போது, "அமர்பூர் கிராமத்தில் கழிப்பறை கட்டப்படாததற்கு விளக்கம் கேட்டு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிராம பஞ்சாயத்திடம் விளக்கம் கேட்டப்பட்டது. அதற்கு கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டதாகவும், அதற்கான பணமும் வழங்கப்பட்டதாகவும் கூறினர். அதிகாரிகளின் காகிதத்தில்தான் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன" என்று கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டப்படுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.