உள்ளூர் எம்.பி. கண்டுகொள்ளாத நிலையில் பள்ளிக்கு ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கி உதவி செய்த சச்சின் டெண்டுல்கர்

உள்ளூர் எம்.பி. கண்டுகொள்ளாத நிலையில் பள்ளிக்கு ரூ.76 லட்சம் நிதி ஒதுக்கி உதவி செய்த சச்சின் டெண்டுல்கர்
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலம் மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் உள்ளது ‘சொர்ணமயி சஸ்மால் சிக் ஷா நிகேதன்’ உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததால், நூலகம், ஆய்வகம், மாணவிகளுக்கு தனி இடம் கட்டுவதற்கு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் முயற்சி மேற்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உள்ளூர் எம்.பி. பிரபோத் பாண்டேவை பள்ளி நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். ஆனால், எம்.பி.யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

அதன்பிறகு கட்டிடம் கட்டுவதற்கு வேறு வழிகளில் எப்படி நிதியுதவி திரட்டுவது என்று யோசித்தனர். அப்போது, ‘எம்.பி.க் கள் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்தின்’ (எம்பிஎல்ஏடி) கீழ் மாநிலங்களவை எம்.பி.க்களால் நிதி ஒதுக்க முடியும் என்று தெரிய வந்தது. (மக்களவை எம்.பி.க் களின் தொகுதி மேம்பாட்டு நிதியை அவர்களுடைய சொந்த தொகுதிக்கு மட்டும்தான் செலவிட வேண்டும். அந்தக் கட்டுப்பாடு மாநிலங்களவை எம்.பி.க்கு இல்லை.)

உடனடியாக மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கருக்கு பள்ளி நிர்வாகத்தினர் கடந்த 2014-ம் ஆண்டு கடிதம் எழுதினர். ஆறு மாதங்கள் கழிந்த நிலையில், பள்ளி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து கடிதம் வந்தது. அதை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் உத்தம் குமார் மொகந்தி ஆச்சரியம் அடைந்தார்.

சச்சின் எழுதிய கடிதத்தில், ‘‘உங்கள் பள்ளியை மேம்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்க, மும்பை பாந்த்ரா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளேன். அவர் உங்கள் உள்ளூர் மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க ஏற்பாடு செய்வார்’’ என்று தெரிவித்தார்.

அதன்படி, ரூ.76 லட்சம் ஒதுக்கப்பட்டு பள்ளியில் நூலகம், ஆய்வகம், மாணவிகளுக்கு தனி இடம் ஆகியவை கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன. ‘‘சச்சினுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. கட்டிடங்கள் திறப்பு விழாவுக்கு அவரை அழைக்க உள்ளோம்’’ என்று மொகந்தி உற்சாகமாக கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in