

நாளை (திங்கள் கிழமை) மிஸோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 40 தொகுதிகளுக்கு 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மிஸோத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. எனவே இந்த முறையும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முணைப்பில் உள்ளது காங்கிரஸ் கட்சி. முதல்வர் லால் தன்வாலா உட்பட அவரது அமைச்சரவையில் இருந்ந்து 11 அமைச்சர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் முதல்முறையாக மிஸோரம் மாநில தேர்தலில், 10 தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. இந்த பயன்பாடு, முதன்முதலில் சோதனை அடிப்படையில் நாகாலாந்து இடைத்தேர்தலில் பரிசோதிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் வசதியை படிப்படியாக ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இந்த வசதி நாளை அமல் படுத்தப்படுகிறது.
ஒப்புகை சீட்டு என்றால் என்ன?
தேர்தலில் வாக்கு அளிக்கும் வாக்காளர்களுக்கு, தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்காக வழங்கப்படும் சீட்டே ஒப்புகை சீட்டாகும்.
2014 பொது தேர்தலில் இதற்கான வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நியாயமாகவும், சுதந்தரமாகவும் நடைபெற இந்த முறை உதவும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஆதிக்கம்?
நாடு முழுவதும் மிஸோரம் மாநிலத்தில் மட்டும் தான் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். ஓட்டளிக்க தகுதியான 6,86,305 வாக்காளர்களில் 3,49,506 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர், 3,36,799 வாக்காளர்கள் ஆண் வாக்காளர்கள் ஆவர்.
அதிகமான அளவில் பெண் வாக்காளர்களைப் பெற்றிருந்தாலும் நாளை தேர்தல் களம் காணும் 142 வேட்பாளர்களில் 6 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.