பட்ஜெட்டை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்

பட்ஜெட்டை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்
Updated on
2 min read

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து 10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மத்திய அமைச்சரவை செயலாளர் பிகே சின்ஹாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சமர்ப்பித்த கடிதமும் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு, சின்ஹா தனது பதிலை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், இந்த ஆண்டு முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் முடிவு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கமாக எடுத்துக் கூறுவார் என கூறப்படுகிறது.

ஒருவேளை பட்ஜெட்டை ஒத்திவைக்க மத்திய அரசு விரும்பாவிட்டாலும், அதை தேர்தல் ஆணையம் வலியுறுத்தாது என கூறப்படுகிறது. அதேநேரம், தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிட்ட சலுகைகள் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று புகார் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டை தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார் செய்த பிறகு மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பட்ஜெட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய காங்கிரஸ் தலைமை யிலான அரசு, பிப்ரவரி 28-க்கு பதில் மார்ச் 16-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மக்களைக் கவரும் வகையில் சலுகைகள் வழங்க வாய்ப்பு உள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஆளும் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகும். எனவே, 5 மாநில தேர்தல் முடியும் வரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம்” என்றார்.

ஆனால் பட்ஜெட் தாக்கலை ஒத்திவைக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படி இருக்கும்போது, பட்ஜெட்டை ஒத்திவைக்குமாறு கோருவது ஏன்?” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in