

பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று அவரது தாயார் ராபியா கான் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெருக்கமான ஒருவரால் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் ராபியா கான் கூறியுள்ளார். இதன் மூலம் ஜியா கானின் காதலர் என்று கூறப்படும் சுராஜ் பஞ்சோலி மீது அவர் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை ராபியா கான் தாக்கல் செய்தார். அதில் ஜியா கான் கொலைதான் செய்யப்பட்டார். தற்கொலை செய்து கொள்ளவில்லை. இது தொடர்பான எனது புகாரை போலீஸார் ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட வேண்டுமென்று மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ராபியா கானின் வாக்குமூலத்தை போலீஸார் சனிக்கிழமை பதிவு செய்துள்ளனர்.
ஜியா கான் கடந்த ஜூன் 3-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜியா கானை தற்கொலைக்கு தூண்டினார் என்று சுராஜ் பஞ்சோலி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீஸார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார்.