Last Updated : 25 Jan, 2017 07:59 AM

 

Published : 25 Jan 2017 07:59 AM
Last Updated : 25 Jan 2017 07:59 AM

முலாயமுடன் உறவு முறிந்தது: அமர்சிங் அறிவிப்பு

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய அரசியலின் சாணக்கியர் எனக் கருதப்பட்டவர் அமர்சிங். முலாயம் சிங்கின் நெருங்கிய நண்பரான இவர், அவரது சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் இருந்தார். இந்த இரு சிங்குகளும் இல்லாமல் தேசிய அரசியலில் கூட்டணிகள் உருவானதில்லை என்றும் சுயலாபத்துக்காக கூட்டணிகளை உடைக்கவும் செய்வார்கள் என்றும் புகார் நிலவி வந்தது.

2009-ல் உ.பி.யின் ராம்பூர் மக்களவை தொகுதியில் அமர்சிங் தனது தோழி ஜெயப்பிரதாவை மீண்டும் போட்டியிட வைத்ததில் அவருக்கும் சமாஜ்வாதியின் மூத்த தலைவர் ஆசம்கானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாடுகள் முற்றியதால், 2010-ல் சமாஜ்வாதியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் கடந்த ஆண்டு முலாயம் உதவியால் மீண்டும் சமாஜ்வாதியில் ஐக்கியமானார்கள்.

அப்போது முதல் சமாஜ்வாதியில் தொடங்கிய உட்கட்சி பூசலுக்கு அமர்சிங் தான் காரணம் என புகார் கிளம்பியது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் வசமாகியுள்ளது. இதனால் தனது அரசியல் வாழ்வை காக்கும் பொருட்டு வேறு கட்சியில் சேர முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அமர்சிங் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “சமாஜ்வாதி (சமூகவாதி) என்றிருந்த முலாயம் இப்போது அகிலேஷ்வாதி ஆகிவிட்டார். கட்சிக்காக அவர் என்னுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு விட்டார். முலாயம் இப்படி செய்வதாக இருந்தால் தனது மகனுக்கு எதிராக தேர்தல் ஆணையம் சென்றிருக்க வேண்டாம். லண்டனில் சிகிச்சையில் இருந்த நான், இவரது பேச்சை கேட்டு பாதியில் கிளம்பி வந்தேன். இனி நான் அவிழ்த்து விடப்பட்ட சுதந்திர மான காளை. எனது கண்ணில் தெரியும் பசுமையை மேயத் தயாராகி விட்டேன்” என்றார்.

சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகுவதாக அமர்சிங் இதுவரை அறிவிக்கவில்லை. மாறாக கட்சியில் இருந்து அகிலேஷால் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x