

இளம்பெண் ஷீனா போரா படுகொலை வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரியின் மனைவியை அவரது சொந்த மகனே படுகொலை செய்து தலைமறைவானார். அவரை போலீஸார் ராஜஸ்தானில் நேற்று கைது செய்தனர்.
மும்பையின் புறநகர் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஷீனா போராவின் சடலத்தை கண்டு பிடித்து கொலை தொடர்பான விசாரணையில் முக்கியப் பங்கு வகித்தவர் போலீஸ் ஆய்வாளர் தியானேஷ்வர் கனோர். இவர் தற்போது கார் போலீஸ் நிலையத் தில் ஆய்வாளராக பணியாற்றி வரு கிறார். இவரது மகன் சித்தாந்த் பெற்ற தாயை படுகொலை செய்துவிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு தப்பிச் சென்றார். அவரை போலீஸார் நேற்று கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் விசாரணையின்போது கொலைக்கான காரணத்தை போலீஸாரிடம் சித்தாந்த் விவரித் துள்ளார். அப்போது அதிகப் படியான மன உளைச்சலால் இந்த படுகொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
சித்தாந்துக்கு உயர் படிப்பில் நாட்டம் இல்லை. பிரிட்டன் கல்லூரியில் அவரது தாய் சட்டப் படிப்பை முடித்தவர். இதனால் மகனும் பெரிய அளவில் கல்வி கற்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். இதற்காக மகனை நன்கு படிக்கும்படி அவ்வப்போது அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால் தனது முதலாமாண்டு பி.எஸ்சி. தேர்வை கூட சித்தாந்த் எழுதாமல் புறக்கணித்துள்ளார். இதை பெற்றோருக்கும் தெரிவிக்கவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் தான் தனது தாயிடம் இது பற்றி தெரிவித்திருக்கிறார். இதனால் கடந்த புதன்கிழமை அன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுதான் சித்தாந்த் கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கிறார். முதலில் தன்னை தானே கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் என்று தான் அவர் நினைத்திருக்கிறார். இதைக் கண்டு அவரது தாயார் அலறியதும் தனது எண்ணத்தை மாற்றி தனது தாயை குத்திக் கொலை செய்துள்ளார்.
பின்னர் குளித்துவிட்டு தனது உடைகளையும் மாற்றிக் கொண்டு ரூ.2 லட்சம் பணத்துடன் ரயிலேறி குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு தப்பிச் சென்றார். வழியில் புதிதாக ஒரு மொபைல் போனை வாங்கி தனது நண்பர்களிடம் தாயை கொலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்ட பிறகே போலீஸாருக்கு இருப்பிடம் பற்றி தெரியவந்தது. பின்னர் நேராக ஜெய்ப்பூருக்கு சென்று, அங்கிருந்த ஒரு ஒட்டலில் தங்கியிருந்த சித்தாந்த்தை கைது செய்தனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.
தாயும், தந்தையும் இடைவிடாமல் சண்டையில் ஈடுபட்டதாகவும், நண்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில் இருந்து வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது வரை தனிப்பட்ட வாழ்க்கையில் தாயார் அதிகமாக தலையிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சித்தாந்த் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் தாயை கொன்றதன் மூலம் அதில் இருந்து நீங்கி தற்போது மன நிம்மதி அடைந்திருப்பதாகவும் சித்தாந்த் தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.