Last Updated : 09 Mar, 2017 10:04 AM

 

Published : 09 Mar 2017 10:04 AM
Last Updated : 09 Mar 2017 10:04 AM

உ.பி. இறுதிகட்ட தேர்தலில் 60 %, மணிப்பூரில் 86% வாக்குப் பதிவு: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தது - வரும் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 60 சதவீதமும் மணிப்பூரில் 86 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. இத்துடன் கடந்த 2 மாதங்களாக நடந்த 5 மாநில தேர்தலும் முடிந்ததையடுத்து, வரும் 11-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

கோவா, பஞ்சாப், உத்தரா கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. நாட்டு மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் கடைசி மற்றும் 7-வது கட்டமாக 40 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி டி.வெங்கடேஷ் கூறும்போது, “தேர்தல் அமைதியாக நடந்தது. இதில் 60.03 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன” என்றார். இதன்மூலம் இந்த மாநிலத்தில் நடந்த 7 கட்ட தேர்தலிலும் மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 1.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 14,458 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாஜக 32 தொகுதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து (40) தொகுதி களிலும், சமாஜ்வாதி 31-லும் காங்கிரஸ் 9-லும் போட்டி யிடுகிறது. 535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு பாஜக, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மணிப்பூரில் 86%

மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடை பெற்றது.

இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி விவேக் குமார் தேவங்கன் நேற்று கூறும்போது, “சில சிறு சிறு சம்பவங்களைத் தவிர, வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. இதில் 86 சதவீத வாக்குகள் பதிவானது” என்றார். முதல்கட்ட தேர்தலிலும் 86 சதவீத வாக்குகள் பதிவானது. 2012 தேர்தலில் இங்கு 79.8 சதவீத வாக்குகள் பதிவானது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 98 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், துணை முதல்வர் கெய்கங்காம் மற்றும் மனித உரிமை போராளியான இரோம் ஷர்மிளா ஆகியோரின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலில் நிர்ணயிக்கப்பட உள்ளது.

5 மாநில தேர்தலும் முடிந்த தையடுத்து, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்று வெளியாகிறது. மேலும் இந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x