கப்பல்கள் தொடர் விபத்து எதிரொலி: கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி ராஜினாமா

கப்பல்கள் தொடர் விபத்து எதிரொலி: கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி ராஜினாமா
Updated on
1 min read

கடற்படை தலைமை தளபதி தேவேந்திர குமார் ஜோஷி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த சில மாதங்களாக கடற்படை கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதற்கு தார்மீக பொறுப்பேற்று கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது.

புதிய தலைமை தளபதி நியமிக்கப்படும் வரை கடற்படை துணை தலைமை தளபதி ஆர்.கே.தொவான் அப்பொறுப்பை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் கடற் படை தலைமை தளபதி ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச் சராக இருந்தபோது கடற்படை தலைமை தளபதி விஷ்ணு பகவத் பதவி நீக்கப்பட்டார்.

நேற்று நீர்மூழ்கி கப்பலில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, விளக்கமளித்துள்ளார்.

நீர்மூழ்கி கப்பலில் புகை- 7 வீரர்களுக்கு பாதிப்பு

இந்திய கடற்படைக்கு சொந் தமான ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் நேற்று திடீரென மர்மமான வகையில் புகை பரவியது. இதை சுவாசித்த கடற்படை வீரர்களில் 7 பேர் மூச்சுத் திணறி மயக்க நிலைக்குச் சென்றனர். கப்பலில் இருந்த 2 வீரர்களின கதி தெரியவில்லை.

மும்பையில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் நேற்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது அதிகாரிகள், கடற்படை வீரர்கள் என 70 பேர் கப்பலில் இருந்தனர். ஒரு கேபினில் மட்டும் புகை பரவியுள்ளது. இது விபத்துதான், சதிச் செயல் ஏதுமில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென புகை வெளியானது குறித்த தகவல் கிடைத்ததும் கப்பல் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்டது. உடல் நலக் குறைவு ஏற்பட்ட 7 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் கப்பலின் எந்த பகுதியில் உள்ளனர் என்பது தெரியவில்லை. சம்பவம் நிகழ்ந்த கப்பல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தாகும். கடந்த 7 மாதங்களில் இந்திய கடற்படையின் வெவ் வேறு கப்பல்களில் 10 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 சம்பவங்கள் நீர்மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்டவை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ல் மும்பை துறைமுகத்தில் இருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சகா கப்பல் கடலில் மூழ்கியதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இது சமீபகாலத்தில் கடற்படையில் நிகழ்ந்த பெரிய துயரகர விபத்தாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in