ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அதிகாரங்களுடன் பிரதமர் மோடி மோதுகிறார்: ராகுல் தாக்கு

ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அதிகாரங்களுடன் பிரதமர் மோடி மோதுகிறார்: ராகுல் தாக்கு
Updated on
1 min read

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு முந்தைய நாளில் தான் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி போன்றவற்றின் தன்னாட்சி அதிகாரத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மோதுகிறார் என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பிப்ரவரி 15-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ரிஷிகேஷில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசியது:

எவ்விதமான அரசியல் நிர்பந்தங்களுக்கும் ஆளாகாமல், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. ஆனால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவது குறித்து முந்தைய நாளில் தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பினார்.

இதன் மூலம், ரிசர்வ் வங்கி போன்ற சுதந்திர அமைப்புகளின் தன்னாட்சி அதிகாரத்துடன் பிரதமர் மோடி மோதுகிறார். சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி, எல்லாவற்றிலும் தன்னுடைய தடம் பதிந்திருக்க வேண்டும் என விரும்புகிறார்.

அண்மையில் காதி நாட்காட்டிகளில் கூட, மகாத்மா காந்தி படத்துக்கு பதிலாக நரேந்திர மோடியின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒருவரே ஆட்சி செய்ய வேண்டும் என மோடி நினைக்கிறார். மற்ற எல்லோரின் குரல்களும் மங்கி, தனது குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

நிலைமை இப்படியே போனால், அடுத்தாண்டில் இருந்து ராம்லீலா நாடகங்களில் ஸ்ரீராமனுக்கு பதிலாக மோடியின் முகமூடியை அணிந்து கலைஞர்கள் நாடகம் நடத்தும் நிலை உருவாகிவிடும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in