மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் ஊதிய உயர்வு: 7-வது ஊதியக் குழு பரிந்துரை கடந்த ஜனவரி முதல் அமல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் ஊதிய உயர்வு: 7-வது ஊதியக் குழு பரிந்துரை கடந்த ஜனவரி முதல் அமல்
Updated on
2 min read

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஒட்டுமொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முறைப்படி ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைவார்கள்.

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7-வது ஊதிய குழு பரிந்துரை செய்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான அளவில் ஊதியத்தை உயர்த்த 7-வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை ஆராய்வதற்காக அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம், படிகள் உட்பட ஒட்டுமொத்தமாக 23.55 சதவீதம் வரை உயர்த்தலாம் என பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூடியது. அப்போது திருத்தப்பட்ட 7-வது ஊதிய குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “புதிய ஊதிய உயர்வு மூலம் 47 லட்சம் பணியாளர்களும், 53 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். தவிர சேவைப் பணியில் உள்ள 14 லட்சம் ராணுவ வீரர்களும், ஓய்வூதியம் பெறும் 18 லட்சம் முன்னாள் ராணுவத்தினரும் பயன் பெறுவார்கள். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டதன் மூலம், தனியார் துறையைக் காட்டிலும் தற்போது அரசு ஊழியர்களின் ஊதியம் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே இதற்கு எதிராக யாரும் போர்கொடி உயர்த்த வேண்டாம்” என்றார்.

புதிய ஊதிய உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் சாராம்சம்:

* 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை ஏற்று ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும். அரியர் தொகை இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும்.

* படிகள் மீதான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவை செயலர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தற்போதைய படிகளே தொடரும்.

* பணிக்கொடை (கிராஜுவிட்டி) உச்சவரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் படி ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்ந்துள்ளது.

* ஆரம்ப நிலை ஊதியம் ரூ.7,000 இருந்து ரூ.18,000 ஆக அதிகரிப்பு. அதிகபட்ச ஊதியம் ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு.

* குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 இருந்து ரூ.9,000 உயர்வு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in