

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்காக திரைப்பட நட்சத்திரங்கள் பிரச்சாரம் திட்டமிடப்பட்டு வருகிறது. பாலிவுட்டின் நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் ராம்பால் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்காக திரைப்பட நட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்வது தவிர்க்க முடியாததாக உள்ளது.
இந்தவகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் திரைப்பட நட்சத்திரங்களின் பிரச்சார ஏற்பாடுகள் துவங்கி விட்டன. பாலிவுட்டின் பிரபல நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் ராம்பால், அமித்ஷாவை டெல்லி பாஜகவின் தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.
இவர், மும்பையின் பிரபல மாடலாக இருந்து பாலிவுட் நட்சத்திரமாக பிரபலமானவர். இந்த சந்திப்பிற்கு பின் வழக்கமாக நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கருத்தை செய்தியாளர்களிம் தெரிவித்தார்.
அப்போது ராம்பால் கூறுகையில், "அரசியலில் சேர நான் இங்கு வரவில்லை. நம் பிரதமர் நரேந்தர மோடிஜியின் பணிகளால் நான் மிகவும் கவரப்பட்டுள்ளேன். இவருக்கு நான் எந்தவகையில் உதவ முடியும் என ஆலோசனை செய்ய வந்தேன்" எனத் தெரிவித்தார்.
பாஜகவின் ஐந்து மாநில தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியாவையும் ராம்பால் சந்தித்தார். இதனால், தேர்தலுக்கு முன்பாக ராம்பால் பாஜகவில் சேரும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இது குறித்து கைலாஷ் விஜய்வர்கியாவிடம் கேட்கப்பட்ட போது அவர் பதில் தர மறுத்து விட்டார்.
பாஜகவில் பாலிவுட் நட்சத்திரங்கள் சேர்வதும், தேர்தலில் பிரச்சாரம் செய்வதும் புதிய விஷயமல்ல. வினோத்கன்னா, சத்ருகன் சின்ஹா, ஹேமாமாலினி மற்றும் தர்மேந்திரா ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இவர்களில் வினோதகன்னா மற்றும் சதிருகன் சின்ஹா தேசிய ஜனநயக முன்னணி ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். தற்போது, ஹேமாமாலினி மற்றும் சத்ருகன் சின்ஹா பாஜகவின் நாடாளுமன்ற எம்பிக்களாக உள்ளனர். பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப்பும் பாஜகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓம் சாந்தி ஓம், ராக் ஆன் உட்பட பல படங்களில் நடித்தவர் அர்ஜூன் ராம்பால்.