

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத நடவடிக்கை மூலம் பெரிய அளவில் கறுப்புப் பணத்தை கார்த்தி சிதம்பரம் சேர்த்ததாக பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத் துறையினருக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் சுவாமி குறிப்பிட்டார்.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ‘மாறன் சகோதரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது, ஆனால் உண்மையான குற்றவாளி சிதம்பரம்தான்’ என்ற சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதைக் காட்டினார்.
“சட்ட விரோத ஒப்பந்தத்திற்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். இதன் படி மலேசிய நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 74% பங்குகளையே வாங்க அனுமதிக்க முடியும்.
கார்த்தி சிதம்பரத்தினால் 21 அயல்நாட்டு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் ரூ.6 லட்சம் கோடி திரண்டுள்ளது, மொத்தத்தில் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள தொகை ரூ.120 லட்சம் கோடியாகும்.
2014-ல் கறுப்புப் பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று கூறினோம், இது குறித்து விசாரணை முகமைகள் நிறைய ஆதாரங்களையும் தரவுகளையும் திரட்டின. ஆனால் ஒன்றும் செய்யவில்லை.
கார்த்தி சிதம்பரத்தை நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை அமைப்புகள் கோரின, ஆனால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
கறுப்புப் பண விவகாரத்தில் பிரதமர் மோடியை குறை கூறுவது எளிது. ஆனால் ஆட்சியதிகாரம் இதில் ஒத்துழைப்பு அளிக்கவில்லையெனில் நடவடிக்கை கடினமே” இவ்வாறு கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில், “என்னைப் பற்றி அவதூறான சில குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. என்னுடைய கணக்கு வழக்குகள் சட்டத்திற்கு இணங்க மிகச்சரியாக உள்ளது.” என்று மறுத்துள்ளார்.