Last Updated : 27 Dec, 2013 10:36 AM

 

Published : 27 Dec 2013 10:36 AM
Last Updated : 27 Dec 2013 10:36 AM

மைசூர் மகாராஜாவின் வாரிசு யார்? ராணி பிரமோத தேவி 29-ல் அறிவிக்கிறார்

மைசூரின் கடைசி மகாராஜா ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானதையடுத்து, அரச வம்சத்தின் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அடுத்த வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாரிசு யார் என்பதை ராணி பிரமோத தேவி வரும் 29-ம் தேதி அறிவிக்கிறார்.

சுமார் 700 ஆண்டுகளாக மைசூரை உடையார் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த மகாராஜாக்கள் வெகுசிறப்பாக ஆண்டு வந்தனர். மைசூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றது.

அரச குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு மன்னர் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மைசூரின் கடைசி மகாராஜா ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ‌ உடையார் (60), கடந்த 10-ம் தேதி திடீரென காலமானார். அவருக்கு வாரிசு இல்லாததால், டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்ற மகாராஜாவின் இறுதிச் சடங்குகளை அவரது அக்கா காயத்ரி தேவியின் மகன் கந்தராஜ அர்ஸ் (36) செய்தார். இந்நிலையில், கோடிக்கணக்கான சொத்துக்களை நிர்வகிக்கப்போகும் அடுத்த வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உடையார் குடும்பத்தில் தகராறு

மகாராஜாவுக்கு இறுதிச் சடங்கு செய்த கந்தராஜ அர்ஸை அடுத்த வாரிசாக நினைத்து சில அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு மறைந்த ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மனைவி ராணி பிரமோததேவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் மகாராஜாவின் தங்கையான மீனாட்சி தேவியும் அவரது குடும்பத்தினரும் கந்தராஜ அர்ஸை வாரிசாக நியமிக்க ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரமோததேவி தன்னுடைய சித்தப்பா மகனான ஷரண் குமாரை அடுத்த

வாரிசாக அறிவிக்க வேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது. இதற்கு மகாராஜாவின் இரண்டு சகோதரிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கர்நாடக அரசும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் தலையிட்டு, மகாராஜா குடும்பத்தினரை சமரசம் செய்தனர். ஆனாலும் ராணி பிரமோத தேவி, அர்ஸை ஒருபோதும் அடுத்த வாரிசாக ஏற்கப்போவதில்லை என உறுதியாகக் கூறிவிட்டார்.

அதே நேரத்தில் மன்னர் குடும்பத்தின் சொத்துகளுக்காக வாரிசு தகராறு முற்றினால், அவற்றை அரசுடமையாக்கவும் வாய்ப்பிருப்பதால் அவர்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தத்து மகன் என்ன ஆனார்?

மைசூர் உடையார் சாம்ராஜ்ஜி யத்தைப் பொறுத்தவரை பெரும் பாலான மகாராஜாக்களுக்கு ஆண் வாரிசு இல்லை. இதனால் மகாராஜாக்கள் 2-வது திருமணம் செய்துகொண்டு ஆண் வாரிசை பெற்றுக்கொள்வார்கள். அல்லது குடும்ப ஜோதிடரின் அறிவுரைப்படி மகனை தத்தெடுத்துக்கொள்வார்கள். கடைசி மகாராஜாவான ஸ்ரீ கண்டதத்த உடையார் கூட ஜெயசாம ராஜேந்திர உடையாரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த ஸ்ரீ கண்டதத்த உடையாருக்கு வாரிசு இல்லாததால், ராணி பிரமோததேவி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்மகனை தத்தெடுத்தார். அவரை தனது மகனாக ஏற்க முடியாது என அப்போதே ஸ்ரீ கண்டதத்த உடையார் கூறியதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது வாரிசு குறித்த பிரச்சினை எழுந்துள்ள நிலையில், தத்து மகன் என்ன ஆனார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

டிச.29-ல் அறிவிப்பு

ஸ்ரீ கண்டதத்த உடையாரின் உறவினர்களும், மனைவி ராணி பிரமோததேவியின் உறவினர்களும் 'மைசூரின் அடுத்த‌ மகாராஜா பட்டத்தை' பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வாரிசு தொடர்பான அறிவிப்பு வரும் 29-ம் தேதி ராணி பிரமோததேவி தலைமையில் மைசூர் அரண்மனையில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 1974-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதிய மகாராஜா பற்றிய விவரங்களை கர்நாடக அரசிற்கும், கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கும் மைசூர் அரச குடும்பம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x