

கேரளத்தில் தமது கட்சி சார்பில் மக்களவைக்குப் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பட்டியலை இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு தலைமை வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.
கட்சியின் பொலிட்பீரோ உறுப் பினர் எம்.ஏ.பேபி, தற்போதைய எம்.பி.க்கள் 4 பேர் இதில் இடம் பெற்றுள்ளனர். தற்போது எம்பியாக உள்ள எம்.பி.க்கள் பி. கருணாகரன் (காசரகோடு), எம்.பி.ராஜேஷ் (பாலக்காடு), பி.கே. பிஜு (ஆலத்தூர்), எஸ். சம்பத் (அட்டிங்கல்) ஆகியோர் மீண்டும் வேட்பாளர் களாக இடம்பெற்றுள்ளனர்.
மாநில முன்னாள் அமைச்சரும் கொல்லத்துக்கு உட்பட்ட குந்தாரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேபி ஆர்.எஸ்.பி கட்சியின் என்.கே. பிரேமசந்திரனை எதிர்த்து போட்டியிடுகிறார். கொல்லம் தொகுதியை ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆர்.எஸ்.பி. கட்சிக்கு ஒதுக்கியது. கடந்த வாரம் இடதுசாரி முன்னணியிலிருந்து விலகியது ஆர்எஸ்பி கட்சி.
இன்னொரு முக்கிய வேட்பாளரான மாநில முன்னாள் அமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினருமான பி.கே.ஸ்ரீமதி கண்ணூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கோழிக்கோடு தொகுதியில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.விஜயராகவன் போட்டியிடுகிறார்.
5 சுயேச்சைகளையும் வேட் பாளர்களாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. திரைப்பட நடிகர் இன்னோசன்ட் (சாலக்குடி), முன்னாள் ஐஏஏஸ் அதிகாரி கிறிஸ்டி பெர்னாண்டஸ் (எர்ணாகுளம்), முன்னாள் காங்கிரஸ் தலைவர் பீலிபோஸ் தாமஸ் (பத்தனம் திட்டா), வி.அப்துல் ரஹ்மான் (பொன்னணி), ஜாய்ஸ் ஜார்ஜ் (இடுக்கி) ஆகியோர் வேட்பாளர் களாக அறிவிக்கப்பட்ட சுயேச்சைகள்.
இந்திய கம்யூ. வேட்பாளர்கள்
இடதுசாரி ஜனநாயக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதற்கான வேட்பாளர்களை இந்த கட்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது. பென்னட் பி ஆப்ரகாம் (திருவனந்தபுரம்), சி.என்.ஜெய தேவன் (திருச்சூர்), சத்யன் மொக்கேரி (வயநாடு), செங்கரா சுரேந்திரன் (மாவேலிக்கரா) ஆகி யோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்கள். கேரளத்தில் ஏப்ரல் 10ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.