

‘‘முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில் அங்கு புதிய அணை கட்டவே அரசு நினைக்கிறது’’ என்று கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான அரசு, புதிய அணை கட்டுவதற்கு சட்டப்பேரவையில் 3 முறை தீர்மானங்களை நிறைவேற்றியது. கடந்த 2009, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் 3 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், 120 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், எனவே, அணை நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே 2-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு பொறுப்பேற்றவுடன் இந்த பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது, முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக அரசின் நிலை என்ன என்று கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணைக்கு பதில், அங்கு புதிய அணை கட்டுவதற்கே புதிய அரசு விரும்புகிறது. சட்டப்பூர்வமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் நன்கு ஆராய்ந்த பிறகு புதிய அணை கட்ட வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை. இந்த விஷயத்தில் மாநிலத்தின் நலனை இந்த அரசு முழுமையாக பாதுகாக்கும். அத்துடன் அணையை சுற்றியுள்ள மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.