சுற்றுலா வந்த டென்மார்க் பெண் 8 பேர் கும்பலால் பலாத்காரம்: டெல்லியின் புகழுக்கு மீண்டும் களங்கம்

சுற்றுலா வந்த டென்மார்க் பெண் 8 பேர் கும்பலால் பலாத்காரம்: டெல்லியின் புகழுக்கு மீண்டும் களங்கம்
Updated on
2 min read

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு டெல்லிக்கு மீண்டும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

டென்மார்க்கில் இருந்து சுற்றுலா வந்த 51 வயது பெண் ஒருவர் டெல்லியில் 8 பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டார். புது டெல்லி ரயில் நிலையம் அருகில் நகரின் இதயப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் நகரின் புகழுக்கு மற்றொரு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

ஜனவரி 1ம் தேதி இந்தியா வந்த இப்பெண், கடந்த திங்கள்கிழமை ஆக்ரா சென்றுவிட்டு, அன்று மாலை மத்திய டெல்லி, பஹார்கன்ச் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினார். செவ்வாய்க்கிழமை கன்னாட்பிளேஸ் அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்குச் சென்றார். மாலை சுமார் 4 மணியளவில் தனது ஹோட்டலுக்கு திரும்பும்போது, வழி தெரியாததால் சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் அவரை புது டெல்லி ரயில் நிலையம் எதிரில் உள்ள பஹார்கன்ச் பகுதிக்கு அழைத்து வந்துள்ளது. அங்கு கத்தி முனையில் அவரிடமிருந்த பணம், ஐ-பாட் மற்றும் உடைமைகளை பறித்துள்ளனர். பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர் என போலீஸ் வட்டாரங்கள் கூறின.

இச்சம்பவத்துக்குப் பிறகு அப்பெண் தட்டுத்தடுமாறி இரவு 7 மணிக்கு ஹோட்டல் திரும்பியுள்ளார். முதலில் சக பயணிகள் சிலரிடம் நடந்த சம்பவத்தைக் கூறிய அப்பெண் பிறகு ஹோட்டல் மேலாளரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இரவு 8.30 மணியளவில் அவர் போலீஸுக்கு புகார் தெரிவித்துள்ளார். போலீஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்த பிறகு அப்பெண் டென்மார்க் தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அப்பெண் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.அப்பெண் மருத்துவப் பரிசோத னைக்கு முன்வரவில்லை. உடனே நாடு திரும்பவேண்டும் என கூறியுள்ளார்.

“அவர் இங்கு மருத்துவப் பரிசோதனைக்கு முன்வராவிட்டாலும் டென்மார்க் சென்றபின் அவர் பரிசோதனை செய்துகொள்வார். சந்தேகத்துக்கிடமான சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். இவர்கள் அனைவரும் நிலையான இருப்பிடமின்றி சுற்றித் திரிபவர்கள். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்” என்று விசாரணை அதிகாரிகள் கூறினர்.

ஆம் ஆத்மி தலைமைக்கு பெண் எம்.எல்.ஏ கேள்வி

டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு, அக்கட்சியின் பெண் எம்எல்ஏ டினா ஷர்மா இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் கட்சி அக்கறை செலுத்தவில்லை. பெண் கமாண்டோக்கள் எங்கே சென்றார்கள்? பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் கட்சிக்கு முக்கியம் இல்லாமல் போய்விட்டனவா? அவை வெறும் சடங்குகளாகிவிட்டனவா?” என்றார். மேலும், “2013 தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 2014 மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் கட்சியினர் மும்முரம் காட்டுகின்றனர்” என்றும் அவர் குறை கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in