

பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடி வெளியாகி சர்ச்சைக்குள்ளான முன்னாள் அமைச்சர் சந்தீப் குமாரை ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் திலீப் பாண்டேவின் தலைமையில் நடந்த கட்சி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கட்சியிலிருந்தே அவரை முழுமையாக நீக்குவது தொடர்பாக பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
சந்தீப் குமார் மறுப்பு:
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சந்தீப் குமார் நேற்று கூறும்போது, "தலித் என்பதால் எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த சிடி போலியானது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். கட்சியில் தலித் சமூகத்தின் முகமாக நான் இருந்தேன். எங்கள் சமூக மக்களிடையே செல்வாக்குடன் இருந்து வருகிறேன். எனவே எனக்கு எதிராக சதி நடந்துள்ளது" என்றார்.
வருந்திய கேஜ்ரிவால்:
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால், "சந்தீப் குமாரின் செய்கை மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சிக் கொள்கைகளில் இருந்து விலகுவதைக் காட்டிலும் உயிரை மாய்த்துக் கொள்வது மேல்" எனக் கூறியிருந்தார்.
சந்தீப் குமாரின் ஆபாச வீடியோவை முன்வைத்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆம் ஆத்மியை சரமாரியாக விமர்சித்தினர்.