Last Updated : 09 Apr, 2017 11:42 AM

 

Published : 09 Apr 2017 11:42 AM
Last Updated : 09 Apr 2017 11:42 AM

போலி கால் சென்டர் மூலம் அமெரிக்கர்களிடம் பணம் சுருட்டல்: முக்கிய குற்றவாளி சாகர் தாக்கர் கைது

போலி கால் சென்டர்கள் நடத்தி அமெரிக்கர்களிடம் பணம் சுருட்டிய வழக்கில், முக்கிய குற்றவாளியான சாகர் தாக்கர் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானே நகரின் மிர்ரா சாலையில் 7 கால் சென்டர் நிறுவனங்கள் இயங்கி வந்தன. இந்நிறுவனங்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் போலீஸார் 7 நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

விசாரணையில் அமெரிக்காவில் வரி செலுத்தாமல் உள்ள பணக் காரர்களை தொடர்பு கொண்டு கால் சென்டரைச் சேர்ந்தவர்கள் பேசியுள்ளனர். தங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி, வரி பிரச்சினை யில் இருந்து தப்பிக்க உதவுவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுள்ளனர். இது போல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களிடம் சுமார் ரூ.500 கோடி வரை அவர்கள் மோசடி செய் திருக்கலாம் என்று தெரிய வந்தது.

இதுதொடர்பாக கால் சென்டர் இயக்குநர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டனர். 700 ஊழியர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியான சாகர் தாக்கர் என்கிற ஷக்கி (24) துபாய்க்குத் தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு சாகரை தானே போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

அமெரிக்கர்களிடம் மோசடி செய்து பெற்ற பணத்தில் ஆடம்பர கார்களில் சாகர் வலம் வந்துள்ளார். வெளிநாட்டில் கால் சென்ட்டரில் வேலை செய்த ஜகதீஷ் கனானி (33) என்பவருடன் தனது 16 வயதில் இருந்து சாகர் வேலை செய்து வந்துள்ளார். சாகருக்கு கனானிதான் கால் சென்டர் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்று பயிற்சி அளித்துள்ளார்.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதமே கனானியை போலீஸார் கைது செய்தனர். அதன்பின், சாகருக்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை அகமதாபாத்தில் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்தக் கார் பிரபல கிரிக்கெட் வீரரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாகரை, துபாய் அரசு நாடு கடத்தியது. அதன்பின் மும்பை வந்த சாகரை விமான நிலையத்தில், தானே போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x