

கேரள மாநிலம், திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் கடற்கரையை ஒட்டி புல்லுவில்லா என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த ஷீலுவம்மா என்ற 65 வயது மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு அருகில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காகச் சென்றார். அப்போது அங்கு வந்த சுமார் 50 தெரு நாய்கள் அவரை கடித்துக் குதறி சதையை தின்னத் தொடங்கி விட்டன. அவரது அலறல் கேட்டு அவரது மகன் அவரை காப்பாற்றச் சென்றார். அவர் மீதும் நாய்கள் பாய்ந்ததால் அவர் கடலில் குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
பிறகு அக்கம் பக்கத்தினர், குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த ஷீலுவம்மாவை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷீலுவம்மா உயிரிழந்தார்.
இவரது மரணத்துக்கு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று அவரது உறவினர்களும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.