

வரும் மக்களவை பொதுத் தேர்தலின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக சுமார் 7,000 ரயில்வே போலீஸார் (ஆர்பிஎப்) தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் பல கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ரயில்வே காவல் படையின் 9 கம்பெனிகள் தயார் நிலையில் உள்ளன. அதாவது ஒரு கம்பெனிக்கு 90 வீரர்கள் வீதம் மொத்தம் 6,750 பேர் தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவர்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ரயில்வே போலீஸின் 60 கம்பெனிகள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதல் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும் பொதுத் தேர்தலின்போது, போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் ரயில்வே முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரை தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 1,000 பெட்டிகளைக் கொண்ட 50 ரயில்கள் இயக்கப்படும். தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களும் இயக்கப்படும்.
தேர்தலுக்கு தேவையான பொருள்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய சில ரயில்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மற்ற ரயில்களும் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்படும்.