அரசியல் சட்டப்பிரிவு-370 ஐ வைத்து மக்களை பிளவுபடுத்தப் பார்க்கிறார் மோடி - எஸ். ஆர். பி குற்றச்சாட்டு

அரசியல் சட்டப்பிரிவு-370 ஐ வைத்து மக்களை பிளவுபடுத்தப் பார்க்கிறார் மோடி - எஸ். ஆர். பி குற்றச்சாட்டு
Updated on
2 min read

அரசியல் சட்டப்பிரிவு 370 பற்றி குஜராத் முதல்வரும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறிய கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்தப் பிரிவு பற்றி பல விஷயங்களை ‘தி இந்து’விடம் பகிர்ந்து கொள்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். அவரது பேட்டி:

இந்தியாவுக்கு 1947-ம் ஆண்டில் சுதந்திரத்தை பிரிட்டிஷ் அரசு சும்மா தரவில்லை. எந்த இடத்திலும் நமது உரிமைகளை அங்கீகரித்து விடக்கூடாது என்பதால் பல கட்டுப்பாடுகளோடுதான் அளித்தது.

அத்துடன் பிரிவினையை ஏற்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளை உருவாக்கியது. சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு நிர்வாகத்தில் உரிமைகள் வழங்கியது. நாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியாவின் 40 சதவீத நிலப்பரப்பு சுதேசி மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. நாட்டு மக்கள் தொகையில் 28% பேர் அங்கே வாழ்ந்தனர். சுதேச சமஸ்தானங்கள் தொடர்ந்து தனியாக இருக்கலாம் அல்லது இந்தியா, பாகிஸ்தான் இரண்டில் ஒன்றில் சேர்ந்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டுதான் பிரிட்டிஷார் சென்றனர்.

இந்த சமஸ்தானங்களில் காஷ்மீர், ஹைதராபாத் தனித்துவம் வாய்ந்தவை. காஷ்மீரில் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாகவும், மன்னர் இந்துவாகவும் இருந்தனர். ஹைதராபாத்தில் மன்னர் (நிஜாம்) முஸ்லிமாகவும், பெரும்பான்மை மக்கள் இந்துக்களாகவும் இருந்தார்கள்.

பாகிஸ்தான், தனது எல்லையோரம் அமைந்துள்ள காஷ்மீர் மன்னருக்கு பல வகையிலும் நெருக்கடிகள் தந்தது. எல்லையோரம் வசித்த பழங்குடியினர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, காஷ்மீரைக் கைப்பற்றத் தூண்டியது. அந்தப் பழங்குடிகள், காஷ்மீர் மீது போர் தொடுத்தார்கள். பாகிஸ்தான் ராணுவமே அவர்களுடன் சேர்ந்து தலைநகர் நகர் நோக்கி வந்தது. அப்போது, காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவிடம் உதவி கேட்டு, ஜவஹர்லால் நேருவிடம் முறையிட்டார்.

இந்தியா உதவ வேண்டும் என்றால் 2 முக்கிய நிபந்தனைகளை காஷ்மீர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. காஷ்மீர் மன்னர் பதவி விலக வேண்டும். காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பதே அது. அந்த நிபந்தனைகளை மன்னர் ஹரிசிங் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகே நகரை நோக்கி வந்து கொண்டிருந்த பாகிஸ்தானியப் படைகளை விரட்டியடித்தது இந்தியா. ஹரிசிங்குக்குப் பதில் அவரது மகன் கரன்சிங், மன்னராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

அப்போது செய்யப்பட்ட இணைப்பு உடன்பாட்டில் காஷ்மீரின் சூழ்நிலைகள், சிறப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு சில சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் கேட்டதற்கு இணங்கவே இந்திய அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவு காஷ்மீருக்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. அதற்கான ஜனாதிபதியின் பிரகடனம் 1952 நவம்பர் 17-ம் தேதி அமலுக்கு வந்தது.

காஷ்மீரில் பிறந்தவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆடவரை மணந்தால் காஷ்மீரில் எந்த ஆதாயத்துக்கும் உரிமை கோர முடியாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அப்படிக் கிடையாது. உரிமைகள் உண்டு. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அவருடைய சகோதரி, மத்திய அமைச்சர் சச்சின் பைலட்டைத் திருமணம் செய்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹாஜா செரீப், காஷ்மீரத்துப் பெண்ணைத் தன் குடும்பத்தில் மணம் முடித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளர் என்ற கோதாவில் மோடியைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கும் பா.ஜ.க.வின் தலைவர்களுக்கு பிரிவு 370-ஐப் பற்றித் தெரிந்திருக்கும்போது, தனக்கு மட்டும் தெரியாததுபோல், ‘370-ஐ நீக்குவோம்’ என்று மோடி பிரச்சாரம் செய்கிறார். இதுபோன்ற தவறான பிரச்சாரத்தின் மூலம் மக்களைக் குழப்பி நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பதாகவே கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in