கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் உ.பி. எஸ்பிஐ வங்கிக் கிளையில் 2000-த்துக்கும் மேற்பட்ட புதிய கணக்குகள்: சிபிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் உ.பி. எஸ்பிஐ வங்கிக் கிளையில் 2000-த்துக்கும் மேற்பட்ட புதிய கணக்குகள்: சிபிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

உ.பி. மாநில பரைலியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில் பணமதிப்பு நீக்க உத்தரவுக்குப் பிறகு டிசம்பர் 31-ம் தேதி வரை 2000-த்துக்கும் மேற்பட்ட புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு சுமார் ரூ.8 கோடி வரை கணக்கில் வராத பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிபிஐ வங்கி அதிகாரிகள் மற்றும் சிலர் மீது குற்றச்சதி, ஏமாற்று வேலை, ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இது பற்றிய உறுதியான தகவல் கிடைத்ததையடுத்து உத்தரப் பிரதேச பரெய்லியில் ஸ்டேட் வங்கியின் சிவில் லைன்ஸ் வங்கியில் திடீரென சோதனை மேற்கொண்டது சிபிஐ.

அப்போது கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு பெரிய அளவில் ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்னர் புதிய கணக்குகளும், செயலில் இல்லாத கணக்குகளும் உயிர் பெற்றுள்ளன.

வங்கி அதிகாரிகளால் சுமார் 2,441 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 667 சேமிப்புக் கணக்குகளும், 53 நடப்புக் கணக்குகளும் 94 ஜன் தன் கணக்குகளும், 50 பிபிஎஃப் கனக்குகளும் 1,518 ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளும், 13 பண்டிகைகால கணக்குகளும், 2 மூத்த குடிமக்கள் கணக்குகளும் ஒரு அரசு கணக்கும் தொடங்கப்பட்டுள்ளதாக சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 794 தடவை ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, சில சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய தொகையும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

தனி நபர்களுக்கு வேண்டி இந்த கணக்குகளை வங்கி அதிகாரிகள் தொடங்கியுள்ளனார், இதனால் முறையான ஆவணங்கள், கணக்குகளின்றி மிகப்பெரிய தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

“செயலில் இல்லாத 267 கணக்குகள் மீண்டும் உயிர் பெற்றன, இதன் மூலம் செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைகேடுகளை மறைக்கும் நோக்கத்துடன் பணத்தை பெற்றதற்கான விவரங்கள், செல்லாத நோட்டுகளுக்கு புதிய நோட்டுகள் அளித்தமை குறித்த ஆவணங்கள், பதிவேடுகள் எதுவும் பராமரிக்கப் படாததும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வங்கியின் ரொக்கத்துறை பராமாரிக்கும் பதிவேட்டிலும் சில எண்ட்ரிகள் மிகவும் அலட்சியமாகக் கையாளப்பட்டுள்ளதோடு பல பக்கங்களில் திருத்தங்களும் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

“சில நபர்களுக்காக வேண்டி பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கத்தை தோற்கடிக்கும் வண்ணம் கறுப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு மாற்று நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர். கூறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in