

நாடாளுமன்றத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் ஏர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று ஏர் இந்திய ஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் கூறியுள்ளார்.
ஏர் இந்திய ஊழியரை செருப்பால் தாக்கிய சம்பவத்துக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று (வியாழக்கிழமை) முதன் முறையாக சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வாட் பங்கேற்றார்.
இந்த நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக சிவசேனா எம்பிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் ரவீந்திர கெய்க்வாட் பேசும்போது, விதிகளை மீறுபவர்கள் இங்கு சுதந்திரமாக சுற்றுகிறார்கள். ஆனால் என் அரசியலமைப்பு உரிமை மீறப்பட்டுள்ளது. என் மீது கொலை முயற்சி வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சட்டத்தை மீறியுள்ளது.
உண்மை இங்கு வெற்றி பெற வேண்டும். நீங்கள்தான் என் பாதுகாவலர்கள். நீங்கள் என் தாயைப் போன்றவர்கள். நான் என்ன தவறு செய்தேன் என்று ஊடக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்?” என்றார்.
மேலும் அந்த சம்பவத்தை குறித்து கூறும்போது, 'நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த நபர் என்னுடன் தவறாக நடந்து கொண்டார். என்னைத் தூண்டினார், என்னிடம் இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் ஏர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது" என்றார்.
முன்னதாக புனேயிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த ரவீந்திர கெய்க்வாட் இகானமி கிளாஸ் மட்டுமே உள்ளதை அறியாமல் பிசினஸ் கிளாஸ் கேட்டு தகராறு செய்தார், இதனையடுத்து ஏர் இந்தியா உதவி மேலாளரான 62 வயது ஆர்.சுகுமாரை அவர் தன் காலணியால் 25 முறை அடித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனமும் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் மற்றும் கோ ஏர் நிறுவனங்களும் கெய்க்வாட் விமானப் பயணம் செய்ய தடை விதித்தது.
ஏர் ஆசியா, விஸ்தாரா ஆகிய விமான சேவை நிறுவனங்களும் கூட கெய்க்வாட்டுக்கு எதிரான தடை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன.
மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக ரவீந்திர கெய்க்வாட் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.