

விசாரணை கைதிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் தலைவரும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று சிறைக் கைதிகள் சீர்திருத்தம் குறித்த தேசிய கருத்தரங்க தொடக்க விழாவில் பேசிய அவர், நிரம்பி வழியும் சிறைகளில் நெரிசலை தவிர்க்கும் வகையில் இதை வலியுறுத்தியுள்ளார்.
தனது தொடக்க உரையில் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘சிறைகளால் தொடர்ந்து அதிகரித்து கைதிகளின் நெரிசல், அடிப்படை மனித உரிமை மீறலுக்கு வழி வகுத்து விடும். சிறைகள் தண்டனை பெற்ற கைதிகளுக்கானதே அன்றி விசாரணைக் கைதிகளுக்கானது அல்ல. சிறை சீர்திருத்தங்கள், குற்றவியல் நீதி முறையில் தேவைப்படும் மேம்பாடு ஆகியவை தேசிய மனித உரிமை கவுன்சிலின் கவலைகளில் முக்கியமானவை.
சிறைகள் மாநில அரசுகளின் கீழ் உள்ளதால், கட்டமைப்பு வசதிகள், உணவு, சுகாதாரம், மருத்துவ வசதி மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள், கைதிகளின் புகார்கள் பற்றி மாநில அரசுகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து பெரும் பங்காற்றலாம். சிறைகளின் நிலைமைகளை மேம்படுத்த மாநில அரசுகள் மேலும் அதிகமாக செலவிடவேண்டும்’ என்று பேசினார்.
கருத்தரங்கின் இறுதி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.