

டெல்லி சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி உறுப்பினருமான சோம்நாத் பாரதியின் மீது சாட்சிகளை கலைக்க முயன்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் நீதிமன்றம் தவறு செய்துவிட்டதாக சோம்நாத் தெரிவித்தார்.
சோம்நாத் வழக்கறிஞராக வாதாடிய ஒரு வழக்கில், அவர் சாட்சிகளை கலைக்க முற்பட்டதாக இந்த குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சி பாஜக, சோம்நாத் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஆனால் சோம்நாத், நீதிமன்றம் தவறு செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவாலும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
வங்கி மோசடி சம்பந்தமாக சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம், பவன் குமார் என்பவருக்காக, சோம்நாத் ஒரு வழக்கில் வாதாடினார். சிறப்பு சிபிஐ நீதிபதி பூனம் பாம்பா விசாரித்த இந்த வழக்கில் பவன் குமார் மற்றும் சோம்நாத் இருவருக்கும், சாட்சியை கலைக்க முயன்றதற்கு, அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். பவன் குமாருக்கான ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய போது, இந்த கருத்தினை நீதிபதி தெரிவித்திருந்தார்.
எதிர் தரப்பு சாட்சி ஒருவரைத் தொடர்பு கொண்டு, அவரது அபிப்ராயத்தை கேட்க முயன்றதற்கு பாரதி மற்றும் அவரது கட்சிக்காரர் பவன்குமாருக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது. இது முறைகேடான செயல் என்றும் குறிப்பிட்டிருந்தது.
எதிர்கட்சி தலைவர் ஹர்ஷ்வர்தன், "சோம்நாத் செய்த தவறு பாட்டியாலா நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதிபதியும் அதை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் டெல்லி மக்கள், சோம்நாத் ராஜினாமா செய்ய கோர வேண்டும். முதல்வர் கேஜ்ரிவால் நியாய தர்மங்களைப் பற்றி கவலைப்படுபவராய் இருந்தால், தனது அமைச்சரை அவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறினார்.
டெல்லியில் ஆளும் அரசுக்கு ஆதரவு தரும் காங்கிரசின் தலைவரான அர்விந்தர் சிங் பேசுகையில், "சட்டத்தை காக்க வேண்டியவர், அதை மீறியுள்ளார். நீதி, நெறிமுறைகளை அடிப்படையாக வைத்து பதவியேற்றுக் கொண்டுள்ள ஒரு கட்சி, மனசாட்சி என்று எதாவது இருந்தால், அதைப் பார்த்து கேள்வியெழுப்ப வேண்டிய தருணம் இது. தனக்கு எதிராக புலன் விசாரணை நடந்தால் அது தவறு எனக் கூறுவதற்கும், கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின் மேல் சந்தேகங்களை எழுப்பவதற்கும் அவர் அவ்வளவு பெரிய மனிதரா? தான் செய்வது சரி, மற்றவர்கள் செய்வது தவறு என்பது தான் அவர் எண்ணமா? இது நியாயமான செயலா என டெல்லி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த குற்றச்சாட்டை பாரதி மறுத்துள்ளார். தான் குற்றம் சாட்டப்படவில்லை என்றும், எதிர் தரப்பு சாட்சியுடன் பேசுவது சாட்சியை கலைப்பதாக ஆகாது என்றும் தெரிவித்தார். "சாட்சியை மிரட்டுவதுதான் தவறு. பேசுவது எந்த விதத்திலும் தடை செய்யப்பட்டதல்ல. நீதிபதி தவறான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார்" என பாரதி கூறியுள்ளார்.
முதல்வர் கேஜ்ரிவால், சோம்நாத் பேசிய ஒளிப்பதிவை ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். "அந்த ஒளிப்பதிவைப் பார்த்துவிட்டு நீங்கள் எது உண்மை என முடிவு செய்யுங்கள். நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம் ஆனால் இந்த விஷயத்தில் அது தவறு செய்துவிட்டது. ஸ்டிங் ஆபரேஷன் மேற்கொண்டதை, சாட்சியை கலைக்க முயன்றதாக நீதிபதி கூறியுள்ளார்" என கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி கூறுகையில் ஆம் ஆத்மி கட்சி, நீதி நேர்மைக்கான தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் அதன்படி செயல்படுகிறார்களா என்பதை தேசம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது எனக் கூறினார்.