

மொரீஷியஸ் நாட்டுக்கு ரூ.3,200 கோடி கடன் வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்பு உட்பட 4 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவை பலப்படுத்துவது மற்றும் பிராந்திய, சர்வதேச அரசியல் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இரு நாடுகளுக்கிடையே கடல்சார் பாதுகாப்பு உட்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் மொரிஷீயஸ் நாட்டுக்கு ரூ.3,200 கோடி கடன் வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியப் பெருங்கடல் பகுதி யில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை வெகுவாக பாதிக்கும் கடற்கொள்ளை, போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல், சட்டவிரோத மீன் பிடிப்பு மற்றும் இதர சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணித்து, அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளோம். கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும்.
மேலும் வர்த்தகம், முதலீடு உட்பட பல்வேறு முக்கிய துறைகளில் இரு நாடுகளுக் கிடையே உள்ள உறவை மேலும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மொரீஷியஸ் நாட்டில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரவிந்த் ஜெகநாத் கூறும் போது, “இந்தியாவின் நிதியுதவி யுடன் (கியூர்பாயின்ட் முதல் போர்ட் லூயிஸ் வரை) செயல்படுத்தப்படும் மெட்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்போம். மேலும் சகோஸ் தீவுக்கூட்டங்களுக்கு உரிமை கொண்டாடும் எங்களது நிலைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவு அளித்து இருப்பதை வரவேற்கிறோம்” என்றார். இதற்கு பிரிட்டனும் உரிமை கோருவது குறிப்பிடத்தக்கது.
கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் மட்டுமல்லாமல், மொரீஷியஸில் அரசு ஊழியர் பயிற்சி கல்லூரி (சிவில் சர்வீசஸ் காலேஜ்) அமைப்பது, கடல் ஆராய்ச்சி மற்றும் எஸ்பிஎம் மொரீஷியஸ் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம்-இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி இடையிலான அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் ஆகியவை மற்ற 3 ஒப்பந்தங்கள் ஆகும்.