

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த வாக் கெடுப்பின்போது காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சியின் ஆதரவையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று பாஜக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 288 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் பாஜக -122, சிவசேனா- 63, தேசியவாத காங்கிரஸ் -41, காங்கிரஸ் 42 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் நந்தட் தொகுதி பாஜக எம்எல்ஏ கோவிந்த் ரத்தோட் அண்மையில் உயிரிழந்தார். இதனால் பாஜகவின் பலம் 121 ஆக குறைந்துள்ளது. மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 287 ஆக உள்ளது. இதன்படி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
அண்மைக்காலமாக பாஜக, சிவசேனா கட்சிகளிடையே விரிசல் அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சரவை விரிவாக் கத்தின்போது சிவசேனாவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை. பதவி யேற்பு விழாவையும் அந்தக் கட்சி புறக்கணித்தது.
தேசியவாத காங்கிரஸ் ஆதரவு
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்றுமுன்தினம் கூறியபோது, ஏற்கெனவே அறிவித்தபடி பாஜக அரசுக்கு வெளி யில் இருந்து ஆதரவு அளிப்போம், எங்கள் முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதியுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியபோது, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தால் நாங்கள் எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நிலவிவரும் நிலையில் அந்த மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் பிரதாப் ரூடி கூறியபோது, காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சி ஆதரவு அளித்தாலும் ஏற்றுக் கொள்வோம். சிவசேனா எங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
இன்று சபாநாயகர் தேர்தல்
முன்னதாக சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் இன்று காலை நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் ஹரிபாபு வாக்டே, சிவசேனா சார்பில் விஜய் ஆதி, காங்கிரஸ் சார்பில் வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்களை வாபஸ் பெற இன்று காலை 10 மணி கடைசி நேரமாகும்.
போட்டி இருக்கும் பட்சத்தில் காலை 11 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும். வாக்குப் பெட்டி மூலம் ரகசியமாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.