2015-ம் ஆண்டில் விபத்தால் 4.1 லட்சம் பேர் மரணம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

2015-ம் ஆண்டில் விபத்தால் 4.1 லட்சம் பேர் மரணம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
Updated on
1 min read

நாடு முழுவதும் 2015-ம் ஆண்டில் இயற்கை மற்றும் செயற்கை விபத்து காரணமாக 4.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

புயல், அடைமழை, வெள்ளம், வெப்பம், நிலச்சரிவு, காட்டுத் தீ உள்ளிட்ட இயற்கை சீற்றம் காரணமாக ஏற்படுவது இயற்கை விபத்து மரணம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோல, சாலை விபத்து, நீரில் மூழ்குதல், மின்சாரம் தாக்குதல், கூட்ட நெரிசல் என மனிதர்களால் வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவு காரணமாக ஏற்படுவது செயற்கை விபத்து மரணம் என்று அழைக்கப்படுகிறது.

விபத்து மற்றும் தற்கொலை மரணம் தொடர்பான விவரங்களை என்சிஆர்பி ஆண்டுதோறும் தொகுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டின் மரண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

நாடு முழுவதும் 2015-ல் மொத்தம் 4,13,457 பேர் விபத்தால் மரணம் அடைந்துள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்துக்கு 47 பேர் விபத்தால் இறந்தனர். இதில் 20.6 சதவீதம் பேர் பெண்கள், 79.4 சதவீதம் பேர் ஆண்கள். எனினும், இது 2014-ம் ஆண்டைவிட (4,51,757) குறைவு ஆகும்.

இதில் 2.5 சதவீத (10,510) மரணத்துக்கு இயற்கையும், 81.3 சதவீதம் (3,36,051) கவனக்குறைவும், 16.2 சதவீதம் (66,896) மற்றவையும் காரணங்களாக அமைந்தன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். 9-ல் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள். 37,081 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

விபத்து மரணத்தில் மகாராஷ்டிரா 15.6 (64,566) சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசம் (40,629), உத்தரப் பிரதேசம் (36,982), தமிழ்நாடு (33,665), குஜராத் (28,468) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் 1,624 விபத்துகள் ஏற்பட்டு 1,522 பேர் உயிரிழந்துள்ளனர். இதிலும் மகாராஷ்டிரா (278) முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in