

2 ஜி அலைக்கற்றை தொடர்பான சிபிஐ நீதிமன்ற விசாரணையில் ஆஜரான டிஎஸ்பி நிலை சிபிஐ அதிகாரி சஞ்சய்குமார் சின்கா, கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர்கள் கூட்டத்தில் கனிமொழி ஆஜராகவில்லை என சாட்சியம் கூறியுள்ளார். இது, கனிமொழிக்கு சாதகமான முக்கிய வாக்குமூலம் என்பதால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
புகாரின் பின்னணி:
‘ஸ்வான்’ டெலிகாம் நிறுவனத்திற்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சலுகை காட்டப்பட்டதாகவும்: அதற்கு ஈடுசெய்யும் வகையில் சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் பங்குதாரராக இருந்த கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூபாய் 200 கோடி ’கடன்’ கொடுத்து உதவியதாகவும் கனிமொழி மீது சிபிஐ புகார் கூறியிருந்தது.
பிப்ரவரி 13, 2009-ல் கூடிய கலைஞர் தொலைகாட்சியின் இயக்குநர்கள் கூட்டத்தில் சினியுக்கிடம் இருந்து கடன் வாங்க முடிவு செய்யப்பட்டது எனவும், அதில் நிர்வாகி சரத்குமாருடன் கனிமொழியும் கலந்து கொண்டார் எனவும் சிபிஐ புகார் கூறியிருந்தது. இது, 2 ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழி மீதான முக்கிய புகார் ஆகும்.
குறுக்கு விசாரணை
இந்நிலையில், வியாழக்கிழமை கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அவர், 2 ஜி அலைக்கற்றை விசாரணை அதிகாரிகளில் ஒருவரான டிஎஸ்பி சின்காவை விசாரணைக்கு அழைத்திருந்தார்.
சின்காவை குறுக்கு விசாரணை செய்த ஜெத்மலானி, “அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டரா?” எனக் கேட்டதற்கு, ‘இல்லை’ எனப் பதிலளித்தார்.
பிறகு, ‘எந்த ஆதராமும் இல்லாமல், கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்கள் கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டதாக சிபிஐ தவறான புகாரை அவர் மீது பதிவு செய்துள்ளது’ என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக, சிபிஐயால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட கலைஞர் தொலைக்காட்சியின் பிப்ரவரி 13, 2009 கூட்டத்தின் ’மினிட்ஸ்’-ஐ சுட்டிக்காட்டினார் ஜெத்மலானி.
கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர்கள் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை என சிபிஐ அதிகாரியே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், வழக்கிலிருந்து கனிமொழி விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்த வழக்கு கடைசி கட்டத்தில் உள்ள நிலையில், சிபிஐயின் எஸ்.பி.யான விவேக் பிரியதர்ஷினி வெள்ளிக்கிழமை ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது