Last Updated : 27 Dec, 2013 12:00 AM

 

Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

முதல்வராக பதவியேற்கும் முன்பே ‘மக்கள் தர்பார் - கேஜ்ரிவாலுக்கு டெல்லிவாசிகள் அமோக ஆதரவு

முதல்வராகப் பொறுப்பேற்கும் முன்பே டெல்லியில் மக்கள் தர்பார் (பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் முகாம்) நிகழ்ச்சியை அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக் கிழமை நடத்தினார்.

இதற்கு டெல்லிவாசிகள் அமோக ஆதரவு அளித்தனர். அருகில் உள்ள உத்தரப்பிரதேச எல்லையோர மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

டெல்லியையொட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஜியாபாதில் உள்ள கௌசாம்பி பகுதியில் கேஜ்ரிவாலின் வீட்டின் முன்பு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மக்கள் தர்பார் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டெல்லிவாசிகள், தங்கள் பிரச்சினைகளைப் பற்றி முறையிட்டனர்.

அதை பொறுமையாகக் கேட்ட கேஜ்ரிவால், “தேர்தல் அறிக்கை யில் கூறியுள்ளபடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 700 லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் திட்டம், பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள் நிறைவேற்றப்படும். உங்கள் குறைகள் அனைத்தும் நான் அறிவேன். பதவி ஏற்றவுடன் அவை அனைத்துக்கும் தீர்வு காண்பேன்” என்றார்.

இந்த கூட்டத்தில் கேஜ்ரி வாலை பாராட்டுவதற்காக உத்தரப்பிர தேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந் தனர். அக்கூட்டத்தில் படித்த இளைஞர்கள் அதிகமானோர் இருந்தனர். அவர்களில் ஒருவரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் சிங், “நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் ஏழை எளியவர்கள், பணமில்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களால் வழக்காடுவதற்கான செலவை மேற்கொள்ள முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கறிஞர் கள் குழுவை அமைத்து ஏழைக ளுக்கு இலவசமாக வாதாட ஏற்பாடு செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அவரின் வேண்டு கோளை கேஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.

அலகாபாத்தைச் சேர்ந்த முகேஷ் சிங் கூறுகையில், “அர்விந்த்ஜி, நீங்கள் எங்கள் தலைவராகி விட்டீர்கள். உங்களுக்கு டெல்லி போலீஸார் அளிக்க முன்வந்துள்ள பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு கேஜ்ரிவால் மறுப்புத் தெரிவித்தார்.

நேர்மையான அதிகாரிகளுக்கு அழைப்பு

இந்த கூட்டத்திற்கு பின் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லி அரசில் நேர்மையாகப் பணிபுரியும் அதிகாரிகள் என்னை எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலமாக தொடர்பு கொண்டால், அவர்களை முக்கிய பதவியிடங்களில் பணியமர்த்த தயாராக உள்ளேன்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண என்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை. ஆனால், நேர்மை யான, திறமையான அதிகாரிகள் என்னுடன் கைகோக்க முன்வந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

ஆம் ஆத்மி கட்சியின் வலுவான தொடர்புகளின் மூலம் நேர்மையான அதிகாரிகள் அடையாளம் காணப்படுவார்கள். திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைகளைப் பெற ஐஐடி, ஐஐஎம் ஆகிய சிறந்த கல்வி நிறுவன குழுக்களின் உதவிகளை நாட இருக்கிறோம்.

முதன் முறையாக ஒரு முதல்வர் (கேஜ்ரிவால்) தன்னுடன் பணியாற்ற நேர்மையான அதிகாரிகளை விரும்புகிறார். இதுவரை பதவிக்கு வந்த ஆண் அல்லது பெண் முதல் வர்கள், ஊழல் செய்து கமிஷன் அளிப்பவர்களையே விரும்பி வந்தனர்” என்றார்.

ராம் லீலா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கேஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சமூக சேவகர் அண்ணா ஹசாரேவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுப்பேன் என்றும் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக காஜியாபாதின் காவல்துறை கண்காணிப்பாளர் அனுப்பிய போலீஸாரை கேஜ்ரிவால் திருப்பி அனுப்பிவிட்டார்.

கேஜ்ரிவால் கடந்த புதன்கிழமை நடத்திய மக்கள் தர்பார் நிகழ்ச்சியி லும், வெளிமாநிலங் களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

பதவியேற்பு தேதி

இதற்கிடையே கேஜ்ரிவால் பதவியேற்க உள்ள டிசம்பர் 28-ம் தேதி தொடர்பாக சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி அன்றுதான் தொடங்கப்பட்டது.

128 ஆண்டுகள் முடிவடைந்து 129-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ் கட்சி தொடங் கப்பட்ட தேதியில், அக்கட்சியை டெல்லி தேர்தலில் வீழ்த்திய கேஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x