Last Updated : 22 Sep, 2016 07:19 AM

 

Published : 22 Sep 2016 07:19 AM
Last Updated : 22 Sep 2016 07:19 AM

கேஆர்எஸ், கபினி அணைகள் மூடப்பட்டன: காவிரி நீரை திறந்துவிட முடியாது - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு சித்தராமையா அறிவிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித் துள்ளார். இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகள் மூடப்பட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''21-ம் தேதி (நேற்று) முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழகத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரைக் கர்நாடகா திறக்க வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்'' என நேற்று முன்தினம் உத்தர விட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்பின ரும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொடரும் போராட்டம்

கர்நாடகாவில் கன்னட அமைப்பினரின் போராட்டம் தொடர்கிறது. இதனால் பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 15 நாட்களுக்கும் மேலாக கர்நாடகா- தமிழகம் இடையே போக்குவரத்து தொடர்ந்து முடங்கியுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எல்லையிலே நிறுத்தப்பட்டு, தமிழ் திரைப்படங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக நேற்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் வரும் 24-ம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்டி, உச்ச நீதிமன்ற‌ தீர்ப்புக்கு எதிராக தீர்மானம் நிறை வேற்ற முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னாள் பிரதமரும் மஜத தலைவருமான தேவகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது தேவகவுடா, உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்க வேண்டாம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என சித்தராமையாவுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாஜக புறக்கணிப்பு

இதைத் தொடர்ந்து சித்தராமையா, காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக‌ நேற்று இரவு அவசர அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். இதனை பாஜக புறக்கணித்தது. இதனால் பெரும் அரசியல் நெருக்கடிக்கு இடையே சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள்., எம்.பிக்கள் கூட்டம் கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத் துக்கு பிறகு முதல்வர் சித்தராமையா மீண்டும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதிலும் காவிரி விவகாரம் தொடர்பாகவும், அரசியல் நெருக்கடி தொடர்பாகவும் விரிவாக ஆலோ சனை நடத்தினார். இதையடுத்து சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து தமிழகத்துக்கு காவிரி நீரை விட முடியாது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குடிநீருக்கே கடும் த‌ட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழகத்துக்கு சம்பா பாசனத்துக்காக ஒரு சொட்டு நீரைக் கூட வழங்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் முடிவையும் ஏற்க முடியாது. இது தொடர்பாக சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.

இதனால் கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீர் முழுவதுமாக நிறுத்தப் பட்டது. எனவே பிலிகுண்டுலு செல்லும் கால்வாய்களில் நீர்வரத்து குறைந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளதால், அம்மாநில முதல்வர் சித்தராமையா மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x