தெலங்கானா தனி மாநிலம் அமைவது உறுதி: திக்விஜய் சிங்

தெலங்கானா தனி மாநிலம் அமைவது உறுதி: திக்விஜய் சிங்
Updated on
1 min read

தெலங்கானா தனி மாநிலம் உருவாவது உறுதி. அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டமன்றத்தில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி கொண்டு வந்த தெலங்கானா மசோதாவுக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற் றப்பட்டது. இது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில பொறுப்பாளருமான திக்விஜய் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

“இது முன்பே எதிர்பார்க்கப் பட்டதுதான். இந்த தீர்மானத்தால் ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்படாது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 3-ன்படி மாநிலத்தைப் பிரிப்பது தொடர்பான மசோதா குறித்து சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதன் அடிப்படையில், ஆந்திர சட்டமன்றத்தில் விவாதம் முடிவடைந்து குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப் படவுள்ளது.

எனவே, மாநிலத்தைப் பிரிக்கும் நடவடிக்கையில் ஒரு முக்கியமான பணி இப்போது நிறைவு பெற்றுள்ளது.

சட்டமன்றத்தின் கருத்தை அறிவதற்காகத்தான் இந்த மசோதா அனுப்பப்பட்டது. அதன் மீது வாக்கெடுப்பு நடத்த அல்ல. இப்போது முதல்வர் கிரண் குமார் ரெட்டி கொண்டு வந்த தீர்மானத்தின் மீதுதான் வாக்கெடுப்பு நடந்துள்ளது.

மசோதாவின் மீது நேரடியாக வாக்கெடுப்பு எதுவும் நடக்கவில்லை. எனவே, மசோதா நிராகரிக்கப்பட்டதாக கருதக்கூடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் கூறிய கருத்துகள், பரிந்துரைகள் தொடர்பாக மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்திய பின், தெலங்கானா மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

ஆந்திர மாநில துணை முதல்வரும், தெலங்கானா பகுதியை சேர்ந்தவருமான சி. தாமோதர் ராஜநரசிம்மா ஹைதராபாதில் செய்தியாளர் களிடம் கூறுகையில், “தெலங்கானா மசோதாவை நிராகரித்துவிட்டதாக முதல்வரும், அவரின் ஆதரவாளர்களும் கூறி வருவது நகைப்புக்கிடமானது. மாநில அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமல், மசோதாவுக்கு எதிராக முதல்வர் மட்டும் தனியாக தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். எனவே இதை எவ்வாறு அரசு கொண்டு வந்த தீர்மானமாக கருத முடியும்?” என்றார்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ., கே.டி.ராமாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வரும், சட்டமன்றத் தலைவரும் இணைந்து செயல்பட்டு மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகின்றனர். இதனால் பயன் ஏதுமில்லை. நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2-வது வாரத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in