Published : 02 Dec 2013 07:36 AM
Last Updated : 02 Dec 2013 07:36 AM

ராஜஸ்தானில் 74.38% வாக்குப்பதிவு : 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு

ராஜஸ்தானில் 199 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 74.38 சதவீத வாக்குகள் பதிவாயின.

2008 ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 67.5 சதவீதம் பேர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 166 பெண் வேட்பாளர்கள் அடங்கிய மொத்தம் 2096 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை இந்த தேர்தல் நிர்ணயிக்கும். மொத்தமுள்ள 47223 வாக்குச்சாவடிகளில் 53045 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் 4 கோடியே 8 லட்சத்து 29 ஆயிரத்து 330 பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். 10,812 சாவடிகள் பதற்றம் மிக்கவையாக அறிவிக்கப்பட்டிருந்தன.

வாக்குச்சாவடி கைப்பற்றியது, வன்முறை என ஓரிரு அசம்பாவித சம்பவங்களை தவிர மொத்தத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

துப்பாக்கிச்சூடு

டவுசா மாவட்டம் சலீம்பூர் பகுதியில் உள்ள ஒரு சாவடியில் வாக்குப்பதிவை குலைக்க ஒரு கும்பல் முற்படவே அவர்களை கலைக்க பாதுகாப்புப்படையினர் இரு சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தகவலை மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் நவ்தீப் சிங் தெரிவித்தார். வன்முறை கும்பல் விரட்டி அடிக்கப்பட்டதால் வாக்குப்பதிவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார் அவர்.

அல்வார் மாவட்டத்தின் ஒரு இடத்திலும் வன்முறை ஏற்படவே பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சிக்காபூர் மாவட்டம் பதேபூர் பகுதியில் உள்ள வார்டு ஒன்றில் வாக்காளர்களை ஏற்றி வரப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுக்கு மர்ம கும்பல் தீவைத்தது. பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ருப்வாஸ் பகுதியில் வாக்குச்சாவடி ஒன்றை சமூக விரோத கும்பல் கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக தெரியவரவே சிறிது நேரம் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

பாதுகாப்புப்படையினர் தலையிட்டு சமூக விரோத கும்பலை கைது செய்ததும் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது என பரத்பூர் மாவட்ட ஆட்சியர் நீரஜ் கே.பாஸ்வான் கூறினார்.

கெலோட் நம்பிக்கை

காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெறும் என வாக்களித்த பிறகு நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார் முதல்வர் அசோக் கெலோட்.

வசுந்தரா ராஜே உறுதி

பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மாநில பாஜக தலைவர் வசுந்தரா ராஜே. ஜலாவரில் உள்ள தோப்கானா பகுதி சாவடியில் வாக்களித்துவிட்டு வந்ததும் நிருபர்களிடம் பேசிய வசுந்தரா ராஜே மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x