

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான மது பாதுரி கட்சியில் இருந்து விலகியுள்ளார். டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி அண்மையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நள்ளிரவில் மேற்கொண்ட ஆய்வுக்கு மது பாதுரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர் பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாக அவர் கண்டிக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் பரவின. இதுகுறித்து மது பாதுரியிடம் நிருபர்கள் விளக்கம் கோரியபோது அவர் கூறியதாவது: ஆம் ஆத்மியில் இருந்து நான் விலகியதாகக் கூற முடியாது. ஏனென்றால் கட்சியில் நான் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை.
எனினும் கட்சியில் இருந்து வெகு தூரம் தள்ளி வந்துவிட்டேன், ஆம் ஆத்மியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்களை அவர்கள் மனிதர்களாக நடத்தவில்லை. இப்போது அந்த கட்சியில் நான் இல்லை என்றார்.
மது பாதுரியின் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் திலீப் பாண்டே கூறியதாவது: டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அனைவருக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. மது பாதுரிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பேசிய விவகாரம் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிப் பதற்காக அவரது பேச்சை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது என்றார். கட்சியின் மூத்த தலைவர் அசுதோஷ் கூறியபோது, ஆம் ஆத்மி கட்சி பெண்களுக்கு மதிப்பு, முக்கியத்துவம் அளிக்கிறது. மது பாதுரி அவசரப்பட்டிருக்கக்கூடாது என்றார்.