Last Updated : 03 Jun, 2017 09:42 AM

 

Published : 03 Jun 2017 09:42 AM
Last Updated : 03 Jun 2017 09:42 AM

குரல் அற்றவர்களின் குரல் ஜார்ஜ் பெர்னாண்டஸ்

சோசலிச சிந்தனையாளர், மனித உரிமைப் போராளி, தொழிலாளர்களின் தோழர், பத்திரிகையாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர், சமதா கட்சி, ஜனதாதளத்தை வழிநடத்திய அரசியல் தலைவர் என பல்வேறு தகுதிகளைத் தன்னகத்தே கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு இன்று 88-வது பிறந்த நாள்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஜான் ஜோசப் பெர்னாண்டஸ் -ஆலிஸ் மார்த்தாவின் மகனாக 1930 ஜூன் 3-ம் தேதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தார். பெற்றோரின் விருப்பப்படி கிறிஸ்தவ வேதக் கல்வி பயின்று மதகுருவாக பணியாற்றினார். புரட்சிகர எண்ணம் கொண்ட அவரால் அந்த பணியில் நீடிக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேறி மும்பைக்கு சென்றார். மும்பையில் வேலை தேடி அலைந்த களைப்புடன் சௌபாத்தி கடற்கரை வெளியில் உள்ள பெஞ்சில் உறங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸை போலீஸார் நள்ளிரவில் எழுப்பி வெளியேற்றிய சம்பவங்கள் எல்லாம் நடந்தன.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக சோஷலிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரானார். சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளராகவும் உயர்ந்தார்.

கடந்த 1967 மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.கே.பாட்டீலை தோற்கடித்தார். அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்க தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. கடந்த 1975-ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒடிஷாவின் கோபால்பூரில் இருந்தார். வானொலிச் செய்தியின் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப் பட்டதைத் தெரிந்துகொண்டார். பழுப்பு நிற தாடியுடன் மீனவர் வேடத்திலும், சீக்கியர் வேடத்திலும் சுற்றித் திரிந்தார். எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்ற குஜராத், தமிழக மாநிலங்களில் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்.

கடந்த 1976 ஜூன் 10-ம் தேதி கொல்கத்தாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டார். அவரது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டி போலீஸார் கொடுமைப்படுத்தினர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது விலங்கிடப்பட்ட கைகளை உயர்த்தி, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று துணிச்சலாக முழக்கமிட்டார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தே விண்ணப்பித்தார். தொகுதிக்கே செல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் வெற்றிபெற்றார்.

இந்திரா காந்தி தோல்வியைத் தழுவினார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவி ஜார்ஜை தேடி வந்தது. வழக்கம்போல எளிய பைஜாமா குர்த்தாவில் ரயில்வே அமைச்சராக ரயில் பவனில் நுழைந்தபோது, அங்கிருந்த வாயிற்காவலர், “யார் நீங்கள்? உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு இருக்கிறதா?” என்று கெடுபிடி காட்டினார். அப்போது, “நான்தான் ரயில்வே அமைச்சர்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார்.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் காஷ்மீர் விவகாரங் களுக்கான அமைச்சராக பணியாற்றிய போது காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்.

பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்துவிட்டு, பேருந்து மூலம் வீடு திரும்பிய நாட்கள், 1971 ஜூலை 21-ம் தேதி லைலா கபீரை திருமணம் செய்த நாளில்கூட, தொழிலாளர் போராட்டத்தில் கலந்துகொண்டு விட்டு, அவசரமாக வாடகைக் காரில் வந்து மணமேடை ஏறிய நாட்கள், எட்டு அடிக்கு எட்டு அடி தனிமைச் சிறையில் கொடுமைக்கு ஆளான நாட்களை என்றைக்கும் மறவாதவர்.

ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கும், திபெத், பர்மா விடுதலை ஆதரவாளர்களுக்கும் ஜார்ஜ் பெர்னாண்டஸின் அமைச்சர் இல்லம் புகலிடமாக இருந்தது. கடந்த 1983-ம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையின் வல்வெட்டித்துறையில் நிகழ்த்திய படுகொலைச் சம்பவங்களைப் புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக சர்வதேச சமூகத்தின் முன் வைத்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழ் மக்களின் நன்றிக்குரியவர் ஆவார்.

இத்தகைய மாபெரும் தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அல்ஜைமர் என்ற கொடிய நோயினால் தாக்கப்பட்டு, நினைவிழந்து படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறார். குரலற்றவர்களுக்காக ஓங்கி ஒலித்த அவரின் குரல் இப்போது அடங்கிவிட்டது.

இந்த நிலையில் ஜார்ஜை சந்தித்து ஆறுதல் கூற டெல்லியில் இருக்கும் அவரது வீட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார். அன்றைக்கு அவரது மணநாள். ஜார்ஜிடம் எதையும் பேசி உணர வைக்க முடியாத நிலையில் அவரது துணைவியாரிடம் ஆறுதல் கூறினார். “ஜார்ஜால் அரசியலில் பலன் பெற்றவர்கள், பதவி பெற்றவர்கள், உயர்ந்த இடத்திற்கு வந்தவர்கள் எத்தனையோ பேர் இந்த வீட்டை எட்டிப் பார்த்ததுகூட இல்லை! ஆனால், டெல்லிக்கு வரும்போதெல்லாம் இந்த வீட்டுக்கு வருவது உங்களின் ஆழமான நட்பைக் காட்டுகிறது,” என்று ஜார்ஜ் பெர்னாண்டஸின் துணைவியார் வைகோவிடம் கூறினார்.

அந்த மகத்தான தலைவரை மக்கள் மறக்கவில்லை. கடந்த ஆண்டு அவருடைய பிறந்தநாள் விழாவை பாட்னா முதல் முசாபூர் வரை, மும்பையில், டெல்லியில் என நாடு முழுவதிலும் கொண்டாடி இருக்கிறார்கள்.

அந்த மனித உரிமைக் காவலருக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி பெருமைப்படுத்த வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

ஆ.வந்தியத்தேவன்

அமைப்புச் செயலாளர், மதிமுக.

vanthiyathevan.a@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x