ஜேஎன்யு பல்கலை.,யில் பயின்ற தமிழக மாணவர் தற்கொலை

ஜேஎன்யு பல்கலை.,யில் பயின்ற தமிழக மாணவர் தற்கொலை
Updated on
1 min read

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்த தமிழக மாணவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுப் பாடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் தெற்கு டெல்லியின் முனிர்கா விஹார் பகுதியில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் இருந்து திங்கள்கிழமை மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்த அவரது சடலத்தை போலீஸார் மீட்டனர்.

இது தொடர்பாக தெற்கு டெல்லி சரக போலீஸ் உயரதிகாரி சின்மோய் பிஸ்வாஸ், "ஜீ.முத்துக்கிருஷ்ணன் நேற்று மதியம் (திங்கள்கிழமை) அவரது நண்பரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கே மதிய உணவு அருந்தியிருக்கிறார். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்புவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் முத்துக்கிருஷ்ணன் வெளியில் வராததால் அவரது நண்பர் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அதற்கும் எந்த பதிலும் இல்லாததால் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீஸார் அந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசறியில் தூக்கில் தொங்கியபடி இருந்த அவரது சடலத்தை மீட்டனர். இதுவரை எங்களுக்கு தற்கொலைக் குற்ப்பு ஏதும் கிடைக்கவில்லை" என்றார்.

ஏழ்மையான குடும்பத்திலிருந்து..

சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிகிறார். அவரது தாயார் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். முத்துக்கிருஷ்ணனுக்கு ஒரு மூத்த சகோதரியும் இரண்டு இளைய சகோதரிகளும் இருக்கின்றன. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்துவந்த முத்துக்கிருஷ்ணன் கல்வியில் சிறந்து விளங்கினார். சேலம் அரசுக் கல்லூரில் முதுகலை வரலாறு பட்டம் பெற்றார். தலித் மாணவரான முத்துக்கிருஷ்ணன், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார். பின்னர். டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் பட்டமும் பெற்றிருக்கிறார்.

விசாரணை தேவை..

முத்துக்கிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்து டெல்லி ஜேஎன்யு அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை ஜீவானந்தத்துக்கு தெரிவித்திருக்கின்றனர். மகனின் முடிவை தாங்க முடியாத துயரத்திலிருந்த ஜீவானந்தம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எனது மகன் கோழை அல்ல. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்பதால் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளியே வரும்" என்றார்.

ஜீவானந்தத்துடன் அவரது தோழர்கள் இருவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

விசிக ஆர்ப்பாட்டம்:

முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மரணம் குறித்து உரிய விசாரணை கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் லே பஜார் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in