

பிஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து, அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பாட்னா, கயா, தார்பாங்கா, ஹாஜிபூர், பாகல்பூர், மாதேபுரா, நாலந்தா, ஜேனாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில்களை பாஜகவினர் மறித்தனர். இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் நடுவழியில் தவிப்புக்குள்ளாகினர்.
அண்மையில் சீமாந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதே போல் பிஹார் மாநிலத்திற்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என பாஜகவினர கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 2-ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த்துக்கு முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று பாஜகவினர் ரயிம் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.