உ.பி.வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக; மீண்டும் தேர்தல் நடத்துக: மாயாவதி ஆவேசம்

உ.பி.வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக; மீண்டும் தேர்தல் நடத்துக: மாயாவதி ஆவேசம்
Updated on
1 min read

உ.பி.யில் பாஜக மிகப்பெரிய வெற்றியை நோக்கி முன்னேறும் நிலையில் படுதோல்வி கண்ட பகுஜன் தலைவர் மாயாவதி, மீண்டும் தேர்தல் நடத்துக, மின்னணு வாக்கு எந்திரத்தை தங்களுக்குச் சாதகமாக பாஜக முறைகேடு செய்துள்ளது என்று குற்றச்சாட்டை முன் வைத்தார்.

எனவே, மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் பாஜக அதனைச் சந்திக்கத் தயாரா என்று அமித் ஷாவுக்கு மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் அவர் கூறும்போது, “தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கிறது, நம்ப முடியவில்லை, ஆச்சரியமாக இருக்கிறது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பாஜக தனக்குச் சாதகமாக கோளாறு செய்துள்ளது.

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் அவ்வாக்கு பாஜக-வுக்கே சென்றது போலல்லவா தெரிகிறது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாக்குச் சீட்டு மூலம் அமித் ஷா தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாரா? பாஜக ஜனநாயகக் கொலை செய்துள்ளது. அக்கட்சியின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

இந்த தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்” என்று கூறினார் மாயாவதி.

அவர் மேலும் கூறும்போது, "முஸ்லிம்களும் பாஜகவிற்கு வாக்களித்த்தார்கள் என்ற உண்மையில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த உண்மையை என்னால் ஏற்கவும் முடியாது. சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என பாஜக தலைவர்களை எச்சரிக்கிறேன். இவர்கள் வெற்றி நியாயமானதல்ல. உண்மையிலேயே நியாயமானவர்கள் எனில் நரேந்தர மோடியும், அமித்ஷாவும் தேர்தல் ஆணையம் சென்று பழைய வாக்குசீட்டு முறையில் தேர்தலை நடத்த கூற வேண்டும். இவ்வாறு செய்யவில்லை எனில் அது ஜனநாயகப் படுகொலையாக அமையும்" என்றார்.

4 முறை ஆட்சி..

தலித் சமுதாய ஆதரவுக் கட்சியான பகுஜன் சமாஜ் உபியில் நான்குமுறை ஆட்சி செய்தது. இம்மாநிலத்தில் அதிகமாக உள்ள 22% தலித் வாக்காளர்களும் இந்தமுறை மாயாவதியை புறக்கணித்திருக்கும் நிலை தெரிகிறது. இத்துடன் எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களையும் மாயாவதி தனது கட்சியில் போட்டியிட வைத்திருந்தார். இதன்மூலம், உபியில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்துள்ளனவே தவிர, வெற்றிக்கு வழிவகுக்காமல் போய் விட்டது. மின் இயந்திர வாக்குப்பதிவில் ஊழல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதால் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையை அமலாக்க வேண்டும் என ஏற்கனவே மத்திய தேர்தல் ஆணையத்திற்கு மாயாவதி கடிதம் எழுதியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in