

ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில் ஏழைகளுக்காக ரூ.5க்கு மதிய உணவு திட்டம் மாநகராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது உள்ள விலைவாசியில் ரூ.5க்கு டீ, காபி கூட குடிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை, மாநகராட்சி வளர்ச்சி கழகம் சார்பில் மேயர் மஜீத் உசேன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சோமேஷ் குமார் ஆகியோர் ரூ.5க்கு மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து மேயர் மஜீத் உசேன் கூறுகையில், ஹைதராபாத் மாநகராட்சியில் ஏழைகளுக்காக இத்திட்டம் ரூ. 11 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. நாம்பல்லியில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் மூலம் முதற்கட்டமாக தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக நகரத்தில் 50 மையங்களாக விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.