

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக “ஆண்மையற்றவர்” என்ற வார்த்தையை மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பயன்படுத்தியிருப்பதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி யின் பிரச்சாரக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இது போன்ற விமர்சனங்களை, இது போன்ற வார்த்தைகளை நான் விரும்புவதில்லை” என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் செவ்வாய்க் கிழமை பேசிய சல்மான் குர்ஷித், 2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின் நடந்த கலவரங்களை மோடி கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
அப்போது அவர், “மோடி படுகொலையில் ஈடுபட்டார் என்று நான் கூற வில்லை. கலவரக்காரர்களை தடுக்க முடியாமல் அவர் ஆண்மை யற்று இருந்தார் என்றுதான் சொல்கிறேன்” என்றார்.
குர்ஷித்தின் இந்த கருத்து பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலர் குர்ஷித்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தோல்வி பயத்தாலும், விரக்தி யிலும் காங்கிரஸ் தலைவர்கள் தரக்குறைவாக விமர்சனங்களில் ஈடுபடுவதாக கூறினர்.
மேலும் குர்ஷித்தின் கருத்துக்கு கட்சித் தலைமை மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரினர்.
குர்ஷித் விளக்கம்
எனினும் குர்ஷித் தனது விமர்சனத்தில் தவறேதும் இல்லை என்று குறிப்பிட்டார். “எனது ஆத்திரத்தை வெளிப்படுத்த வேறு சிறந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. நான் அவரது டாக்டர் இல்லை. எனவே தனிப்பட்ட முறையில் அவரை பரிசோதித்திருக்க வாய்ப்பில்லை. எனது கருத்து அரசியல் பின்புலத்தில் பார்க்கப்பட வேண்டும். எதையும் செய்ய முடியாத ஒருவரை பார்த்து அரசியல்ரீதியாக சொல்லப்படும் வார்த்தைதான் அது” என்றார் குர்ஷித். இந்நிலையில் குர்ஷித் கருத்துக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.