

இராக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் சிக்கி இருக்கும் 42 இந்தியர்களை மீட்க மத்திய அரசு சார்பில் தூதர் அனுப்பப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
மேலும் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் அங்கு உயிரோடு தான் இருக்கிறார்கள் என்றாலும் அதனை நிரூபிக்க முடியாத நிலை தற்போது உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிரியா மற்றும் இராக்கில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் அங்கிருக்கும் நகரங்களை தங்கள் வசப்படுத்தி அம்மக்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். இதில் முக்கியமாக இராக்கின் வளங்கள் நிறைந்த நகரங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது போல மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் 42 பேரை கிளர்ச்சியாளர்கள் தங்களது பிடியில் வைத்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியர்களிடம் அவரது உறவினர்கள் இறுதியாக கடந்த ஜூன் 15-ஆம் தேதி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.
அதனை அடுத்து அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதற்கிடையே பிஹாரைச் சேர்ந்த சந்திரபன் திவாரி, இராக்கில் இருக்கும் தனது மகனிடம் பேசியதாகவும், அப்போது இந்தியர்கள் மோசூலை சுற்றிய பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் விதிக்கப்படும் பணிகளை செய்ய வற்புறுத்தப்படுவதாக அவர் தி இந்து-விடம் கவலை தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இராக்கில் தவிக்கும் இந்தியர்களின் உறவினர்கள் ஷிரோமணி அகாலி தல கட்சி உறுப்பினர்களுடன் செவ்வாய்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து அவர்களது துயரங்களை கூறினர்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், "இராக்கில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து அறிய அந்நாட்டுக்கான இந்திய தூதராக எர்பில் சுரேஷ் ரெட்டி வரும் வியாழக்கிழமை அந்நாட்டுக்கு செல்கிறார். இந்தியர்களை பாதுகாப்பாக நமது நாட்டுக்கு அழைத்து வர அந்த நாட்டின் உதவி நாடப்படும். பெற்றோர், உறவினர்களிடம் இராக்கில் வாழுபவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இராக்கில் உயிரோடு தான் வாழ்கிறார்கள் என்பதை உறுதியுடன் கூற முடியும். ஆனால் தற்போது உறவினர்களின் வேதனையை போக்க அதற்கான எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. விரைவில் அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்" என்றார்.
இதனிடையே மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும் அகாலி லோக் தல கட்சியினருமான ஹர்சிம்ரத் கவுர் படால் கூறும்போது, "இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நாங்கள் இதுவரை பல்வேறு வகையில் 6 முறை தகவல்களை பெற்றுள்ளோம். அதில் நமது உறவுகள் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ளது. ஐ.நா. உதவி மையத்தில் பணிபுரியும் அமிர்தசரஸை சேர்ந்த லக்கி சிங் என்பவர் நமது தூதருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார்" என்றார்