Last Updated : 24 Dec, 2013 12:00 AM

 

Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

கன்னட கவிஞர் சிவருத்ரப்பா மறைவு: கர்நாடகத்தில் இன்று பொது விடுமுறை

புகழ்பெற்ற 'கன்னட தேசிய கவிஞர்' ஜி.எஸ்.சிவருத்ரப்பா பெங்களூரில் உள்ள தமது இல்லத்தில் திங்கள்கிழமை காலமானார். 87 வயதான அவரின் மறைவையொட்டி அம்மாநிலத்திற்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் ஆய்வாளருமான 'கன்னட தேசிய கவிஞர்' ஜி.எஸ்.சிவருத்ரப்பா பெங்களூரில் உள்ள பனசங்கரியில் தமது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.முதுமை காரணமாக மிகவும் தளர்வுற்று இருந்த அவர் சமீபகாலமாக இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற் காமல் இருந்தார். கன்னட இலக்கிய வாதிகளாலும் வாசகர்களாலும் சுருக்கமாக ஜி.எஸ்.எஸ். என அழைக்கப்பட்ட ஜி.எஸ்.சிவருத்ரப்பா திங்கள் கிழமை அதிகாலை தம‌து இல்லத்தில் காலமானார்.

கன்னட இலக்கியத்தின் மூத்த இலக்கியவாதியான ஜி.எஸ்.சிவருத்ரப்பாவின் திடீர் மறைவிற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆழ்ந்த‌ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''கன்னட தேசிய கவிஞர் ஜி.எஸ்.சிவருத்ரப்பாவின் இறப்பு கன்னட இலக்கியத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரது மறைவையொட்டி, செவ்வாய்க்கிழமை கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் கர்நாடக அரசின் சார்பில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்''என்றார்.

இலக்கிய பங்களிப்பு

மாணவப் பருவத்திலேயே கன்னடமொழியின் மீது ஏற்பட்ட அபரிமிதமான ஈடுபாட்டு காரணமாக எழுத ஆரம்பித்த ஜி.எஸ்.எஸ். கதை, கவிதை, புதினம், ஆய்வுக் கட்டுரைகள் என மொழியின் அனைத்து தளங்களிலும் பயணித்தார். கலையையும் மொழியையும் குழைத்து சமூகத்தில் புரையோடிக் கிடந்தவைகள் மீது ரௌத்ரம் கொண்டு எழுதியதால் ஜி.எஸ்.எஸ். கன்னடம் கூறும் நல்லுலகம் முழுவதும் கொண்டாடப்பட்டார்.

விருதுகள்

கன்னட மொழியில் பல்வேறு முக்கிய படைப்புகளை படைத்த‌ ஜி.எஸ்.சிவருத்ரப்பாவுக்கு 1978-ம் ஆண்டு 'சோவியத் நிலத்தின் நேரு' என்னும் விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டு கர்நாடக அளவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் 'சாகித்ய அகாடமி விருதினையும் 1984-ம் ஆண்டு 'மத்திய சாகித்ய அகாடமி' விருதினையும் பெற்றுள்ளார். மேலும் அவரது கவிதைகளைப் பாராட்டி கர்நாடக அரசு கவிஞர்களுக்கு வழங்கும் 'பம்பா பிரஷாதி' விருதை வழங்கி கௌரவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x