

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடும் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸுக்கு, இந்த வெற்றி சற்றே ஆறுதலைத் தந்துள்ளது.
மிசோரமில் டிசம்பர் 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றன. 82 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்று வந்தது.
மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட மிசோரமில், காங்கிரஸ் 33 இடங்களை வசப்படுத்தியிருக்கிறது. கடந்த தேர்தலைவிட 1 இடம் மட்டும் குறைவாக வென்றுள்ளது.
மிசோ மாநாட்டு கட்சி 7 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இக்கட்சிக்கு, முந்தைய தேர்தலைவிட இரண்டு இடம் கூடுதலாகக் கிடைத்துள்ளது. 17 இடங்களில் போட்யிட்ட பிஜேபி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு முறை முதல்வர் பதவியை வகித்தவரும், தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கவிருப்பவருமான காங்கிரஸின் பழம்பெரும் தலைவர் லால் தன்ஹாவ்லா, இது தமது அரசு நிர்வாகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார்.
"பொதுவாக 5 ஆண்டுகள் ஆட்சி முடிவில், அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை இருக்கும் எனக் கூறப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அரசுக்கு ஆதரவான நிலை காணப்பட்டது. அதனால்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. விரைவில் எனது தலைமையில் அரசு அமைக்க உள்ளேன்" என்றார்.