நான் இந்திய கலாச்சார தூதர்: தலாய் லாமா கருத்து

நான் இந்திய கலாச்சார தூதர்: தலாய் லாமா கருத்து
Updated on
1 min read

நான் இந்திய கலாச்சாரத்தின் தூதர்’ என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

அசாமின் குவாஹாட்டி நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய அரசின் விருந்தினராக 58 ஆண்டுகள் தர்மசாலாவில் தங்கியுள்ளேன். இப்போது நான் இந்திய கலாச் சாரத்தின் தூதராக மாறிவிட்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக என்னை இந்தியாவின் மகன் என்றே குறிப்பிட்டு வருகிறேன். இதுகுறித்து சீன ஊடகங்கள் என்னிடம் கேள்வி எழுப்பின. அதற்கு பதிலளித்தபோது, எனது மூளை முழுவதும் நாளந்தாவின் சிந்தனைகள் நிரம்பிவிட்டன என்று தெரிவித்தேன். கடந்த 50 ஆண்டுகளாக சப்பாத்தி, தால் சாப்பிட்டு வருகிறேன். எனவே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்னை இந்தியனாகவே உணர்கிறேன்.

நான் எப்போதுமே சமூக ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறேன். நாம் அனைவரும் மனிதர்கள். எனவே மனித நேயத்தை முன்னிறுத்தினால் கருத்து வேறுபாடுகள், பிரச் சினைகள் குறைந்துவிடும்.

எனது வாழ்நாளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனினும் கல்வி மூலம் எதிர்கால சந்ததியினர் கருணை, அன்பை புரிந்து கொள்வார்கள்.

நமது சமுதாயத்தில் இருந்து வன்முறையை ஒழிப்பதும் நமது கடமை. இவ்வாறு தலாய் லாமா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in