

ஜம்முவில் ராணுவ சீருடையில் வந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நேற்று நடத்திய இரு துணிகர தாக்குதல்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் கதுவா மாவட்டம், ஹிரா நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 3 தீவிரவாதிகள் ராணுவ சீருடையில் நின்றிருந்தனர். இவர்கள் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களை வெளியேற்றினர். பின்னர் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் ஜம்மு, விஜய்பூர் பகுதியைச் சேர்ந்த அஜித் ராம் என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பயணிகள் காயமடைந்தனர்.
பின்னர் இத்தீவிரவாதிகள், டிரைவருடன் காரை கடத்திச் சென்றனர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு கதுவாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராணுவ முகாமுக்கள் இவர்கள் நுழைய முயன்றனர். இதையடுத்து ஏற்பட்ட மோதலில் வாயிற் காவலில் இருந்த வி.அந்தோனி உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார்.
தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றதை தொடர்ந்து, அவர்களை தேடும் பணி நடந்தது. இதில் ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே கடத்திச் செல்லப் பட்ட கார் டிரைவரின் உடல் கழுத்து அறுபட்ட நிலையில் பின்னர் கண்டெடுக்கப்பட்டது. கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய 2 முக்கியத் தாக்குதல் இது. கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ராணுவ சீருடையில் வந்த 3 தீவிரவாதிகள் கதுவா, சம்பா மாவட்டங்களில் ஒரு காவல் நிலையம் மற்றும் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தியதில், 4 போலீஸார், ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தற்போதைய தாக்குதலுக்கு ஷோகடா பிரிகேடு என்று இயக்கம் பொறுப்பேற்பதாக கூறியது. என்றாலும் இத்தாக்குதலை லஷ்கர் இ தொய்பா நடத்தியிருக்கலாம் பாதுகாப்பு வட்டாரங்கள் நம்புகின்றன.
தமிழக வீரர்
இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பலியானது தெரியவந்தது. அவர் விழுப்புரம் மாவட்டம், முகை யூரைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவர் மகன் அந்தோணி நிர்மல் (31) என்பது உறுதிசெய்யப்பட்டது. இவருக்கு பவுலின் நிர்மலா என்ற மனைவியும், நிர்மல் ஜெபரிஷா (5), நிர்மல் ஜோஷ்வா (3) என்ற இரு மகள்கள் உள்ளனர். அவரது உடல் சனிக்கிழமை காலை சென்னைக்கு வரும் என்றும் பிற்பகல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.