

இந்திய துணை கண்டத்துக்கான புதிய கிளை தொடங்கப்பட்டதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி மிரட்டல் வீடியோ வெளியிட்டதை அடுத்து, இந்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடம் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
அல்-காய்தாவுக்கான தீவிரவாத இயக்கத் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி, சுமார் 55 நிமிடங்கள் பேசும் மிரட்டல் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.
அதில், "எதிரிகளுக்கு எதிராக ஜிகாத் நடத்தி அந்த மண்ணில் இறையாண்மையை மீட்டு கேலிபத்தை (இஸ்லாமிய நாடு) புதுப்பிக்க வேண்டும்.
அதற்கு முன்பு இந்தியாவுக்கான எங்களது இயக்க கிளை தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தை ஆஸின் உமரும் பாகிஸ்தான் அல்-காய்தா ஷரியத் கமிட்டியும் முன்னெடுத்துச் செல்வார்கள்.
எங்களது கிளை இந்திய துணை கண்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்டக் கூட்டத்தை இன்று கூட்டினார். இதில் இந்த வீடியோவை அரசு உண்மை என நம்புகிறது என்றும், இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் உஷார் நிலை அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்-காய்தா அமைப்பிற்கு ஆளெடுக்கும் வேலை நடைபெறும். ஆகவே, காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
காஷ்மீர், குஜராத், அஸ்ஸாம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் ஒடுக்குதலையும் எதிர்த்து எங்கள் இயக்கம் செயல்படும்" என்று அய்மான் ஜவாஹிரி அந்த வீடியோவில் கூறியுள்ளதையடுத்து, ‘இந்தியாவில் அல்-காய்தா இல்லை” என்று உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் இந்திய நகரங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு அங்கெல்லாம் அல்-காய்தா கிளைகள் தொடங்கப்படும் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து, அல்-காய்தாவுக்காக புதிய பயங்கரவாதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க அனைத்து மாநில அரசு மற்றும் காவல்துறையினருக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.