

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமர்நாத் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. துணை முதல்வர் நிர்மல் சிங், 1,282 யாத்ரிகர்கள் அடங்கிய முதல் குழுவை அனுப்பி வைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
அமர்நாத் யாத்திரை 48 நாட்கள் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. ஜம்மு பகவதி நகரில் உள்ள அமர்நாத் முகாமில், ஆளில்லா விமானங்கள் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஆளில்லா விமானங் கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்குச் செல்லும் இரு பாதைகளிலும் 20 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
துணை முதல்வர் நிர்மல் சிங் கூறும்போது, “நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை பாது காப்பாகவும், அமைதியாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய போதுமான பாதுகாப்பு ஏற்பாடு கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாநில அரசும், அமர்நாத் கோயில் வாரியமும் வழிநெடுக பக்தர்களுக்கான தங்குமிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.
பருவநிலை உட்பட அனைத்து விதமான தகவல்களையும் அளிக்கும் விதத்தில், காவல் துறையினர் மற்றும் பிற அமைப்பு களால் ஆங்காங்கு உதவி மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன” என்றார்.
முதல் குழுவில் 900 ஆண்கள், 225 பெண்கள், 13 சிறார்கள், 144 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 33 வாகனங்களில் சிஆர்பிஎப் வீரர்களின் பாதுகாப் புடன் நேற்று காலை 5 மணிக்கு பயணத்தைத் தொடங்கியது.
பகல்ஹாம், பல்தல் முகாம்கள் வழியாக சென்று, கடல்மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள பனி லிங்கத்தை இன்று தரிசிப்பார்கள்.
தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதால், அமர்நாத் யாத்திரையை சுமூகமாக நடைபெறச் செய்வது பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக இருக்கும்.
12,500 மத்திய துணை ராணுவப் படையினரும், 8,000 மாநில போலீஸாரும் யாத்திரை பாதைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் வந்துள்ளார். இவர், பனி லிங்கத்தை தரிசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.