

சாமியார் நித்யானந்தாவின் 37-வது பிறந்தநாளில், அவரிடம் முறைப்படி தீட்சை பெற்று சந்நியாசி ஆனார் நடிகை ரஞ்சிதா. இதற்கு கர்நாடகத்தில் உள்ள மடாதிபதிகளும் இந்துத்துவா அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. சாமியார் நித்தியானந்தாவுடன் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நித்தியானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீஸார் நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்த போதும் அவர் மீதான வழக்கு கர்நாடகத்தில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தனக்கும் நித்தியானந்தாவிற்கும் இடையே 'குரு-பக்தை' உறவு மட்டுமே இருப்பதாக தெரிவித்தார். சில ஊடகங்கள் தேவையில்லாமல் அவதூறை கிளப்பி வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் 37-வது பிறந்தநாள் விழா பெங்களூரை அடுத்த பிடதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் சந்நியாசியாக மாற விரும்புகிறவர்களுக்கு நித்தியானந்தா தீட்சை வழங்குவார். அதே போல இந்த ஆண்டும் 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீட்சை வழங்கப்பட்டது. அதில் நடிகை ரஞ்சிதாவும் தீட்சைப் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, பிடதி ஆசிரம வட்டாரத்தில் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாகவே ரஞ்சிதா நித்தியானந்தாவின் தீவிர பக்தையாக இருந்து வருகிறார். அவ்வப்போது ஆசிரமத்தில் தங்கி இருந்து தியான முகாம்களிலும் பல்வேறு சேவைகளிலும் பங்கேற்றுவந்தார்.
எனவே, முறைப்படி சந்நியாசம் பெற விரும்பிய ரஞ்சிதா, பிடதி ஆசிரமத்தில் உள்ள குளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நீராடினார். அதன்பிறகு ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடை உடுத்தி, நித்யானந்தாவிடம் தீட்சை பெற்றார். அப்போது ஆசிரம விதிமுறைகளையும் ஆசிரமத்திற்கும் சந்நியாசிக்குமான உறவு குறித்த ஒப்பந்தங்களையும் வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதன்மூலம் ரஞ்சிதா இனி, 'மா நித்ய ஆனந்தமாயி' என அழைக்கப்படுவார் என தெரிவித்தனர்.
''உண்மை, அமைதி, அஹிம்சை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு சந்நியாசியாகி உள்ளேன். இதன்மூலம் முழுமையான பிரம்மச்சர்யத்தை உணர்ந்து வாழ்வேன். இனி எப்போதும் ஆசிரமத்தில் இருப்பேன்'' என்று ரஞ்சிதா மேடையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இந்தத் தகவல் வெளியானதும் ராம்நகர் மாவட்ட செய்தியாளர்கள் பிடதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு சென்றனர். அவர்களை ஆசிரமத்திற்குள் அனுமதிக்க நித்தியானந்தாவின் சீடர்கள் மறுத்துவிட்டனர். அப்போது ஆசிரமத்தை படமெடுத்த புகைப்படக்காரர்களின் கேமராக்களையும் பறித்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களும் பொதுமக்களும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு எதிராக குரல் கொடுத்ததும் கேமராக்களை திருப்பி கொடுத்தனர்.
மடாதிபதிகள் கண்டனம்
ரஞ்சிதாவிற்கு நித்தியானந்தா தீட்சை வழங்கியதற்கு கர்நாடகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இந்துத்துவா அமைப்புகளும் மடாதிபதிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருவரையும் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.